மமதா பானர்ஜி
மமதா பானர்ஜி 
இந்தியா

ஆயுதங்களை சி.பி.ஐ.யே மறைத்து வைத்ததா?- தேர்தல் ஆணையத்திடம் திரிணாமூல் புகார்!

Staff Writer

மேற்குவங்க மாநிலம் சந்தேஷ்காளியில் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் குறித்து மமதா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் கட்சி  சந்தேகம் எழுப்பியுள்ளது. 

தேர்தல் ஆணையத்திடம் இதுகுறித்து அக்கட்சியின் சார்பில் இன்று அளிக்கப்பட்ட புகாரில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. 

அந்த மாநிலத்திலும் நேற்று நடைபெற்ற இரண்டாம் கட்ட மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. அப்போது, திடீரென வடக்கு 24 பர்கானா மாவட்டத்தின் சந்தேஷ்காளியில் முன்னாள் திரிணாமூல் கட்சி நிர்வாகி சேக் சாஜகானின் உறவினர் வீட்டில் பலவகை ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.

அதை வைத்து, மமதா பானர்ஜியின் முன்னாள் அமைச்சரவை சகாவும் பின்னர் பா.ஜ.க.வுக்குத் தாவியவருமான சுவேந்து அதிகாரி, திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கவேண்டும்; மமதா பானர்ஜியைக் கைதுசெய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

முன்னதாக, கடந்த ஜனவரி மாதம் சேக் சாஜகான் இடங்களில் அமலாக்கத் துறை தேடுதல் சோதனை நடத்தச்சென்றபோது, அவரின் ஆதரவாளர்கள் அமலாக்கத் துறையினர் மீது தாக்குதல் நடத்தினர். அதைத் தூண்டிவிட்டதாக சேக் கடந்த பிப்ரவரி 29 அன்று கைதுசெய்யப்பட்டார்.

இந்த நிலையில் வாக்குப்பதிவு நடைபெற்ற நாளான நேற்று சேக்கின் உறவினர் அபு தலேப் மொல்லாவின் வீட்டில் சி.பி.ஐ., ரிசர்வ் போலீஸ் துணையுடன் தேடுதல்சோதனை நடத்தியது. அதில் ஆயுதங்களைக் கைப்பற்றியதாகத் தெரிவிக்கப்பட்டது.

தேர்தலின்போது தங்களின் நற்பெயரைக் கெடுக்கவே பொருத்தமே இல்லாமல் தேடுதல் நடத்தப்பட்டது என்றும் சட்டம் ஒழுங்கு என்பது மாநில அரசின்கீழ் வந்தாலும் இதுகுறித்து சி.பி.ஐ. மாநில அரசுக்குத் தெரிவிக்கவே இல்லை என்றும்

அந்த ஆயுதங்கள் உண்மையில் தேடுதலில் பறிமுதல் செய்யப்பட்டவையா அல்லது திட்டமிட்டு வைக்கப்பட்டவையா என்பது தெரியவில்லை என்றும் திரிணாமூலின் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.