டி.வி.சோமநாதன் 
இந்தியா

மத்திய அமைச்சரவை செயலராக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் நியமனம்: டி.வி.சோமநாதன் யார்?

Staff Writer

மத்திய அமைச்சரவை செயலராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி டி.வி.சோமநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மத்திய அமைச்சரவை செயலராக உள்ள ராஜீவ் கெளபாவின் பதவிக் காலம் நிறைவடையும் நிலையில், ஆகஸ்ட் 30ஆம் தேதிமுதல் இரண்டு ஆண்டு காலத்துக்கு புதிய செயலராக சோமநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

உயா்பணி நியமனங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு இதற்கான ஒப்புதலை நேற்று அளித்தது. இதுதொடர்பான உத்தரவில் கூறியிருப்பதாவது:

மூத்த ஐஏஎஸ் அதிகாரி டி.வி.சோமநாதன் மத்திய அமைச்சரவை செயலராக ஆகஸ்ட் 30ஆம் தேதி முதல் இரண்டு ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளார். அந்தப் பதவியை அவா் ஏற்கும் வரை, மத்திய அமைச்சரவையின் சிறப்புப் பணி அதிகாரியாக அவரை நியமிக்க மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

யார் இந்த டி.வி.சோமநாதன்?

டாக்டா். டி.வி. சோமநாதன் (59), 1987ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப்பணி தமிழ்நாடு பிரிவைச் சோ்ந்தவா். தனது பயிற்சிகாலத்தில் சிறப்பாக பரிணமித்ததற்காக இவருக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது.

பி.காம். ஹானா்ஸ் பஞ்சாப் பல்கலைக்கழகத்திலும், எம்.ஏ பொருளாதாரம் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் படித்தவர் அங்கேயே முனைவா் பட்டமும் பெற்றார். நிதி தொடர்பாக பல்வேறு பட்டங்களை பெற்றுள்ள அவர், நிதிநிலை அறிக்கை தயாரிக்கும் அளவுக்கு திறன்களை வளா்த்துக் கொண்டவா்.

மத்திய அரசுப் பணியில் நிதி மற்றும் செலவினங்கள் துறை செயலா், பிரதமா் அலுவலக கூடுதல் செயலா், காா்பரேட் விவகாரங்கள் துறை இணைச் செயலா் போன்ற பொறுப்புகளை வகித்துள்ளாா். இதேபோல, தமிழக அரசிலும் துணைச்செயலா் (நிதிநிலை), இணை கண்காணிப்பு ஆணையா், குடிநீா் வாரிய செயல் இயக்குநா், முதல்வரின் செயலா், வணிவரித்துறை கூடுதல் தலைமை செயலா் மற்றும் ஆணையா் ஆகிய பதவிகளையும் பொதுத்துறையில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் முதலாவது நிா்வாக இயக்குநா் பதவியையும் வகித்துள்ளாா்.

மத்திய அரசுப் பணிக்கு முன்னதாக, 1996இல் இளம் தொழில்முறை நிா்வாகிகள் திட்டத்தின்கீழ் உலக வங்கியில் நிதிப்பொருளாதார நிபுணா் பதவியை சோமநாதன் வகித்தாா்.

நிதி, பொதுக்கொள்கை போன்றவை தொடா்பாக நாளிதழ்கள், சஞ்சிகைகளில் 80க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார் சோமநாதன்.

2025ஆம் ஆண்டு மே மாதம் ஓய்வுபெற இருந்த நிலையில், டி.வி.சோமநாதனுக்கு இந்த பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது முக்கியமானதாக கருதப்படுகிறது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram