தியோஹர் அஷசர்ஃபி 
இந்தியா

தங்கத்துலயே ஸ்வீட்டு... சும்மா, ஒரு இலட்ச ரூபாய்தான்!

ம.தினோவிகா

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு தங்கத்தாலான இனிப்பு வகை ஒன்று ஜெய்ப்பூர் சந்தையில் கவனம் பெற்றுள்ளது.

'தியோகர் அசசர்ஃபி' எனும் இந்த இனிப்பு 9 கிராமுக்கே விலை ரூ. 1,111.

'ஸ்வர்ண பிரசாத்' அதாவது தங்கப் பிரசாதம் எனும் பெயரில் விளம்பரம் செய்யப்படும் இந்த இனிப்புப் பெட்டியில் 9 இனிப்புத் துண்டுகள் இருக்கும். மொத்த விலை ரூ.9,999 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதே இனிப்பு ஒரு கிலோ விலை ரூ. 1.23 இலட்சம்.

தியோஹர் அஷசர்ஃபி

'அசசர்ஃபி' என்பது பண்டைய காலத்தில், மன்னர்கள் பயன்படுத்திய தங்க நாணயங்களின் பெயர் ஆகும். இதனை நினைவூட்டும் வகையில் இந்த தங்க இனிப்பு வகையை ஜெய்ப்பூரில் உள்ள ஒரு இனிப்புக் கடை அறிமுகம் செய்துள்ளது.

இந்த இனிப்பின் உட்பகுதியைச் செய்ய உண்ணக்கூடிய 24 கேரட் தங்க இலை, பாதாம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ஸ்வரண பாஷ்யம் என்று அழைக்கப்படுகிறது. பின்னர், மெல்லிய தங்க இலை, குங்குமப் பூவுடன் இனிப்பின் வெளிப்புறம் தயார் செய்யப்படுகிறது.

பண்டைய பாரம்பரியம், ஆடம்பரத்தை ஒன்றிணைத்து தீபாவளிப் பரிசாக மக்களுக்கு வழங்குவதே, இந்த இனிப்பைத் தயார் செய்ததற்கான காரணம் என்று கூறுகிறார் இந்த இனிப்பை உருவாக்கிய அஞ்சலி ஜெயின்.

மேலும், இதில் பயன்படுத்தப்படும் உண்ணக்கூடிய 24 கேரட் தங்கம், நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுவதாகவும் கூறப்படுகிறது.

கடந்த ஆண்டும்,'ஸ்வர்ண பிரசாதம்' என்ற பெயரில் தங்கத்தாலான வைரல் மித்தாயை இதே இனிப்புக் கடை விற்பனை செய்துள்ளது. அதனை, ஒரு கிலோ ரூ. 1.11 லட்சம் என்று விற்பனை செய்தது.

தங்கம் மட்டும்தானா என்று கேட்பவர்களுக்கு, விலைமதிப்பற்ற கற்களை போன்ற ஒன்பது வகையான 'காஜூ கத்லி' எனப்படும் முந்திரி கேக்கை தயார் செய்து அசத்தியுள்ளது. இதற்கு 'தியோஹர் நவரத்னா' என்று பெயரிடப்பட்டுள்ளது.

காஜூ கத்லி

இந்த அனைத்து இனிப்பு வகைகளும் இயற்கையான நிறமூட்டிகள், சுவை தரும் பொருட்களை வைத்தே தயார் செய்யப்படுவதாக இதை தயாரித்து விற்பனைக்குக் கொண்டுவந்த அஞ்சலி ஜெயின் குறிப்பிடுகிறார்.

இந்திய பாரம்பரிய ஆயுர்வேத மருத்துவத்தில் மூலிகைகளுடன் சேர்த்து பயன்படுத்தப்படும் தங்கம், நினைவாற்றல், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவும் என்று கூறப்பட்டாலும், தற்போது தயாரிக்கப்படும் உணவுகளில் சேர்க்கப்படும் தங்க இலைகளுக்கு இந்த குணங்கள் இருப்பதாக இன்னும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை.

இருப்பினும், பெரு வணிக நிறுவனங்களும், உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துபவர்களும் இந்த இனிப்புக்கு நல்ல வரவேற்பு கொடுத்துவருவதாகக் கூறப்படுகிறது.

தங்க தீபாவளி கொண்டாட நீங்க ரெடியா?

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram