மத்திய இணை அமைச்சர் மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகுவதாக எல்.முருகன் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், தினக்கூலித் தொழிலாளர் - மாடு மேய்க்கும் எளிய குடும்பத்தில் கொசூர் கிராமத்தில் பிறந்து, அகில இந்திய மாணவர் அமைப்பு, பா.ஜ.க.வில் சுமார் முப்பது ஆண்டுகள் பணியாற்றிய எல்.முருகன், தனக்குக் கிடைத்த பட்டியல் சாதிகளுக்கான தேசிய ஆணையத்தின் துணைத் தலைவர் பதவி, இரு முறை மாநிலங்களவை உறுப்பினர் பதவி, மத்திய இணை அமைச்சர் பொறுப்புகள் மூலம் கிடைத்த வாய்ப்புகளுக்கு நன்றியைத் தெரிவித்துள்ளார்.
தகவல் மற்றும் ஒளிபரப்பு, நாடாளுமன்ற விவகாரங்கள், மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகங்களில் பணியாற்றிய அனுபவம் நாட்டைப் பற்றிய புரிதலை விரிவுபடுத்தியதாகக் குறிப்பிட்டுள்ள அவர்,
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் தமிழ்நாட்டின் மீதான தனிப்பட்ட அக்கறையையும், சென்னை மெட்ரோ, தூத்துக்குடி துறைமுக விரிவாக்கம், அம்ரித் பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் ரயில் நிலையங்களின் மறுசீரமைப்பு மற்றும் ஆழ்கடல் மீன்பிடிப் படகுகள் போன்ற திட்டங்களையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையில் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற வரியைப் பிரதமர் மேற்கோள் காட்டியது, காசி, சௌராஷ்டிர தமிழ்ச் சங்கமங்கள், திருக்குறளை உலகிற்கு எடுத்துச் சென்றது, நாடாளுமன்றத்தில் செங்கோலை நிறுவியது போன்ற நிகழ்வுகள் தமிழ்நாட்டின் பாரம்பரியத்திற்குப் பெருமை சேர்த்துள்ளதாக அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இல. கணேசன், சி.பி. ராதாகிருஷ்ணன், தமிழிசை சௌந்தரராஜன், நிர்மலா சீதாராமன், எஸ். ஜெய்சங்கர் போன்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த தலைவர்கள் வகிக்கும் பொறுப்புகள் நாட்டின் நம்பிக்கையை வெளிப்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், தனது மாநிலங்களவை பதவிக் காலம் 2030 வரை இருப்பினும், 2029 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் கட்சியை வலுப்படுத்தவும், ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று சப் கா விகாஸ் செய்தியைக் கொண்டு சேர்க்கவும் முழு நேரமாகத் தம்மைக் அர்ப்பணித்துக் கொள்ள விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.