இந்தியாவும் அமெரிக்காவும் ஓர் இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்திற்கான கட்டமைப்பை எட்டியுள்ளதாக இன்று அறிவித்துள்ளன. இதன் கீழ் இந்திய பொருட்கள் மீதான இறக்குமதி வரிகளை அமெரிக்கா 18% ஆகக் குறைத்துள்ளது.
இந்த ஒப்பந்தப்படி அமெரிக்காவின் பொருட்கள் இந்தியாவுக்கு இறக்குமதி ஆகும்போது அவற்றின் மீதான அதிகப்படியான இறக்குமதி வரிகளும் குறைக்கப்படும். சிலவற்றுக்கு முழுமையாக ரத்து செய்யப்படும். இந்த ஒப்பந்தம் முன்பே அறிவிக்கப்பட்டிருந்தாலும் தற்போது எந்தந்த பொருட்களுக்கு இந்த வரிச் சலுகை அளிக்கப்படும் என்ற விவரம் வெளியாகி உள்ளது.
இந்த ஒப்பந்ததில் அனைத்து அமெரிக்க தொழில்துறை பொருட்களும் பலன் அடையும். அதே சமயம் மது தயாரிப்பில் கிடைக்கும் உலர்ந்த தானியப்பொருட்கள், கால்நடை தீவனத்திற்கான சிவப்பு சோளம், மரக்கொட்டைகள், பழங்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட பழங்கள், சோயாபீன் எண்ணெய், ஒயின் மற்றும் மதுபானங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான அமெரிக்க உணவு மற்றும் விவசாயப் பொருட்கள் மீதான வரிகளை இந்தியா நீக்கும் அல்லது குறைக்கும்.
கடந்த பிப்ரவரி 13, 2025 அன்று டிரம்ப் மற்றும் நரேந்திர மோடி ஆகியோரால் தொடங்கப்பட்ட பரந்த அமெரிக்க-இந்தியா இருதரப்பு வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகளின் மூலம் உருவானது இந்த ஒப்பந்தம் ஆகும்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்கிவதற்குத் தண்டனையாக இந்தியா மீது அமெரிக்கா 25 சதவீத பரஸ்பர வரியையும் கூடுதலாக 25 சதவீத வரியையும் விதித்தது. இந்திய ஏற்றுமதியாளர்கள்இந்த 50 சதவீத வரிகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர், ஏனெனில் அமெரிக்கா அவர்களின் மிகப்பெரிய ஏற்றுமதி நாடு ஆகும்.
வரிகள் குறைக்கப்பட்டிருப்பது இந்தியாவின் தொழிலாளர் உழைப்பு மிகுந்த துறைகளான ஜவுளி மற்றும் ஆடைகள், தோல் மற்றும் காலணிகள், பிளாஸ்டிக் மற்றும் ரப்பர், கரிம இரசாயனங்கள், வீட்டு அலங்காரப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் மற்றும் சில இயந்திரங்கள் போன்றவற்றின் ஏற்றுமதியை அதிகரிக்க உதவும்.
இடைக்கால ஒப்பந்தம் வெற்றிகரமாக முடிவடையும் பட்சத்தில், பிராண்ட் அல்லாத ஜெனரிக் மருந்துகள், ரத்தினங்கள் மற்றும் வைரங்கள், விமான பாகங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களின் மீதான வரிகள் அமெரிக்காவில் பூஜ்ஜியமாகக் குறையும். இதன் மூலம் இந்தியாவின் ஏற்றுமதித் திறனும் மேக் இன் இந்தியா முயற்சிகளும் மேலும் அதிகரிக்கும் என்று இந்த ஒப்பந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க மருத்துவ சாதனங்களின் வர்த்தகத்திற்கு நீண்டகாலமாக நிலவும் தடைகளை நிவர்த்தி செய்ய இந்தியா ஒப்புக்கொண்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க உணவுத்துறை, விவசாயத்துறை சார்ந்த பொருட்கள் இந்திய சந்தைக்குள் குறைந்த அல்லது பூஜ்ஜிய வரிகளுடன் அனுமதிக்கப் பட்டால் இந்திய விவசாயத்துறை பாதிக்கப்படும் என்ற அச்சம் இருக்கிறது. இத்துறைகள் எந்த அளவுக்குப் பாதுகாக்கப்பட்டுள்ளன என்பது உற்றுக் கவனிக்கப்படுகிறது.