வைபவ் சூர்யவன்ஷி 
இந்தியா

வைபவ் சூர்யவன்ஷி…. The Child, The Myth…துவம்சம் செய்யும் சிறுவன்!

மதிமலர்

அந்த பையனின் முகத்தில் இன்னும் பால் வடியத்தான் செய்கிறது. அவனுக்கு வாக்களிக்கும் வயதுகூட ஆகவில்லை. ஓட்டுநர் உரிமத்துக்கான வயதை எட்ட இன்னும் நான்கு ஆண்டுகள் ஆகும்.

ஆனால் அதற்குள் போட்டிகள் நிறைந்த கிரிக்கெட் உலகில் மிகப்பெரிய ஒளிவட்டத்தை எட்டிவிட்டான்.

12 வயதில் பீஹார் ரஞ்சிக் கோப்பை அணியில் அவன் பெயர் இடம் பெற்றபோது, யார் சிபாரிசு என்று பார்க்கப் பட்டது. அம்மாநில கிரிக்கெட் சங்கமே கூட இரண்டாகப் பிளந்தது. 2023-24 மும்பை அணிக்கு எதிராக பீகார் ரஞ்சி அணிகள் இரண்டு அறிவிக்கப்பட்டன. ஒன்று சங்க தலைவர் அறிவித்தது. இரண்டு செயலாளர் அறிவித்தது. இதில் தலைவர் அணியில் வைபவ் சூரியவன்ஷியின் பெயர் இருந்தது. இறுதியில் தலைவர் அறிவித்த அணிதான் அதிகாரபூர்வமான அணி என போட்டியில் ஆடும் வாய்ப்பைப் பெற்றது. வைபவை அப்போதே பீஹார் மாநில கிரிக்கெட் தங்கள் ‘ சச்சினாக’ கருதத் தொடங்கி இருந்தது.

அதிக எதிர்பார்ப்பு எப்போதும் விளையாட்டில் ஏமாற்றத்தைத் தரும் நிகழ்வைக் காண்கிறோம். ஆனால் வைபவ் ஏமாற்றவில்லை… நம்பி வாங்க… அடிச்சுக் காட்டறேன் என ஆடிக் கொண்டிருக்கிறான். உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அவன் சாதனைமேல் சாதனையாக செய்து கொண்டே இருக்கிறான்.

2024- நவம்பரில் டெல்லி கேபிடல் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் இவனை ஏலத்தில் எடுக்க போட்டி போட்டன. ஏற்கெனவே சீனியர் அணியில் ( ரஞ்சி) இடம்பெற்றிருந்ததால் வைபவுக்கு ஐபி எல்லில் ஆடும் தகுதி வந்திருந்தது. 30 லட்சம் விலையில் தொடங்கி, 1.1 கோடி என ராஜஸ்தான் அணி எடுத்துக் கொண்டது.

அதற்கு முன்னதாகவே ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிராக ஆடிய இந்தியா ஏ அணியில் ஆட வைபவுக்கு வாய்ப்பு அளிக்கப் பட்டிருந்தது. சென்னையில் நடந்த போட்டியில் பையன் 58 பந்துகளில் சதம் அடித்துக் காட்டி இருந்தான்! முன்னதாக பீஹார் உள்ளூர்ப் போட்டி ஒன்றில் 332 ரன்களைக் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்ததும் உண்டு!

இந்திய கிரிக்கெட் வாரியத்தில் திறமையான வீரர்களைக் கண்டறியும் குழுவின் தலைவர் விவிஎஸ் லட்சுமண், இவனை ஆரம்பத்திலேயே அடையாளம் கண்டு ஆதரவு அளித்தார். 19 வயதுக்குட்பட்ட இந்திய அணியில் சேர்த்து ஆடவிட்டவரும் இவரே. ஒரு போட்டியில் பொடியன் 36 ரன்களில் ரன் அவுட் ஆகி திரும்பி வந்து அழ, லட்சுமண் தேற்றிய கதையும் உண்டு!

வைபவ் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு தேர்வனாலும் உடனடியாக களமிறக்கப்படவில்லை. தொடக்க ஆட்டக்காரரும் கேப்டனுமான சஞ்சு சாம்சன் காயத்தால் ஆடமுடியாத ஒரு ஆட்டத்தில் வைபவ் ஆடினார். இவருக்கு முதல் பந்து லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஷர்துல் தாக்கூர் வீசினார். முதல் பந்தையே சிக்ஸருக்கு விளாசி, 20 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அதே சீசனில் 35 பந்துகளில் 100 ரன்கள் அடித்து ஆண்கள் டி20 வரலாற்றில் சதமடித்த மிகவும் இளம் வயது வீரர் ஆனார்!

ஒரு விதத்தில் சஞ்சு சாம்சன் ராயஸ் அணியில் இருந்து விலகவும் வைபவ் காரணம் என சொல்லலாம்! ஏனெனில் சஞ்சு சாம்சனின் தொடக்க ஆட்டக்காரர் இடத்தை வைபவ்க்கு விட்டுத்தர வேண்டி வந்தது!

அதன் பின்னர் 2026-ல் எந்த ஆட்டத்தில் ஆடினாலும் சலிப்பேற்றும் விதத்தில் வைபவ் பெயர் தலைப்புச் செய்தி ஆனது! 50 களும் 100களும் இவனுக்கு சாதாரணம் ஆயின.

19 வயதுக்குட்பட்ட இந்திய அணி சமீபத்தில் உலகக் கோப்பையில் இங்கிலாந்தை தட்டித் தூக்கியபோது வைபவ் மட்டும் அடித்தது 175 ரன்கள்! 80 பந்துகளில்.

இங்கிலாந்தை 100 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து அசுரத்தனமான வெற்றி!

ஐசிசி நடத்தும் பலவிதமான போட்டிகளில் இறுதிப்போட்டியில் அதிக பட்ச ரன்கள் குவித்த வீரர் ஆனார் வைபவ். இப்போட்டியில் 15 சிக்சர் அடித்ததும் ஒரு சாதனையே. 150 ரன்கள் பௌண்டரி, சிக்ஸர்களில் வந்ததும் இன்னொரு சாதனை!

இந்த சிறுவயதில் தன்னைவிட பெரியவர்கள் எல்லோரையும் விட உயரமாகத் தெரிகிறார் வைபவ்! இனி அவன் இவன் என்று சொல்ல முடியாது. வைபவ் ஆட்டத்தின் சிறப்பு என்ன என்றால் ரன்களை மிக வேகமாகக் குவிப்பதுதான். ஒரு நாள் போட்டியாகட்டும்: டி20 ஆகட்டும்… வேகம் வேகம்!

பீஹாருக்காக 2025 டிசம்பரில் விஜய் ஹசாரே கோப்பையில் ஆடியபோது

4 பந்தில் 190, 19 வயதுக்கு உட்பட்ட ஆசியா கோப்பையில் 95 பந்தில் 171 ரன்கள், வளரும் வீரர்களுக்கான ஆசிய கோப்பையில் 42 பந்துகளில் 144 ரன்கள்… அடேங்கப்பா… இந்திய அணியின் சுவர்களாக கருதப்பட்ட ராகுல் திராவிட், புஜாரா போன்றவர்களுக்கு நேர் எதிரான ஆட்டம்… ஆனாலும் அதில் வெற்றி!

இப்போது நாம் வேண்டுவதெல்லாம் இந்த புகழ் வெளிச்சம் வைபவின் ஆட்டத் திறனை பாதிக்கக் கூடாதே என்பது மட்டும் தான்! கிரிக்கெட் உலகை நீண்டகாலம் ஆளக்கூடிய திறமை அவருக்கு இருக்கிறது! நெருக்கடியான சூழல்களில் இருந்து அணியை மீட்கும் மன திடமும் சேர்ந்துகொண்டால் வைபவ் இன்னும் பல சாதனைகளைச் செய்யமுடியும்! இந்த மேதைக் குழந்தைக்காக இப்போதைக்கு கைதட்டிக் கொள்வோம்!