வின்சென்ட் ஜான் 
இந்தியா

வாழ்ந்தால் சொகுசு ஓட்டல், வீழ்ந்தால் ஜெயில்... 30 ஆண்டுகளாக ஓட்டும் தமிழர்!

Staff Writer

இந்தியாவில் உள்ள ஏராளமான சொகுசு நட்சத்திர ஓட்டல்களில் தங்கி, பில் தொகையைச் செலுத்தாமல் கடந்த 30 ஆண்டுகளாக ஏமாற்றி வந்த நபரை சத்தீஸ்கர் மாநில போலீஸார் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வின்சென்ட் ஜான் (69) என்ற நபர் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசி, கண்ணியமான தோற்றம், நளினமான நடையுடன் நடித்து, நட்சத்திர ஓட்டல் உரிமையாளர்களை ஏமாற்றி வந்துள்ளார்.

தன்னை ஒரு யோகா ஆசிரியர், ஆங்கில ஆசிரியர், சுற்றுலா வழிகாட்டி எனப் பொய் முகமூடியுடன் ஓட்டல்களில் அறிமுகப்படுத்திக் கொள்வார்.

பின்னர் ஊழியர்களிடம் இனிமையாகப் பேசி அவர்களின் நம்பிக்கையைப் பெறுவார்.

ஹோட்டலுக்கு வரும்போது இரண்டு பைகளுடன் வரும் இவர், ஒரு பையில் தனது துணிகளையும், மற்றொரு பையில் பழைய செய்தித்தாள்களை நிரப்பி எடுத்து வருவார்.

ஓட்டலைவிட்டு வெளியில் செல்லும்போது ஊழியர்களுக்குச் சந்தேகம் வராமல் இருக்க, செய்தித்தாள்கள் உள்ள பையை அறையிலேயே விட்டுவிட்டு, தனது துணிப்பையுடன் ஓட்டல் அறையில் இருக்கும் லேப்டாப், விலை உயர்ந்த வெளிநாட்டு மதுபானங்கள், சிகரெட்டுகள் போன்ற மதிப்புமிக்க பொருட்களைத் திருடிச் சென்றுவிடுவார்.

கடந்த ஜூன் 25 அன்று ராய்ப்பூரில் உள்ள ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளார். அங்கிருந்த ஊழியர் ஒருவரிடம் பேசி ரூ.1.48 லட்சம் மதிப்புள்ள வாடகை லேப்டாப்பைப் பெற்றுக்கொண்டதுடன், ரூ. 63,755 பில் தொகையைச் செலுத்தாமல் ஜூன் 27 அன்று தப்பியோடியுள்ளார்.

ஓட்டல் நிர்வாகத்தின் புகாரைத் தொடர்ந்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ஒடிசாவின் புவனேசுவரில் வைத்து போலீசார் இவரைக் கைது செய்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், இவர் மீது தில்லி, தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், மகாராஷ்டிரம், கோவா உட்பட்ட பல மாநிலங்களில் மோசடி வழக்குகள் இருப்பது தெரியவந்தது.

இவர் திகார் சிறையில் இருந்தபோது 'சார்லஸ் சோப்ராஜ்' கதைகளால் ஈர்க்கப்பட்டு 300-க்கும் மேற்பட்ட சொகுசு ஓட்டல்களில் இப்படி கைவரிசை காட்டியுள்ளதாக அவரே ஒப்புக்கொண்டார்.

பொதுவாக இத்தகைய சொகுசு ஓட்டல்கள் தங்களின் நற்பெயருக்குக் களங்கம் விளைந்துவிடும் என்ற பயத்தில் சிறிய தொகைகளுக்காகப் போலீஸில் புகார் அளிப்பதைத் தவிர்க்கும்.

இதையே இந்த நபர் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு 30 ஆண்டுகளாக ஏமாற்றி வந்துள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram