பிரதமர் மோடியின் இருக்கையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தும் காங். பெண் எம்பிக்கள் 
இந்தியா

பிரதமர் மீது தாக்குதல் முயற்சியா..? மக்களவையில் நடந்தது என்ன..? வெளியான பரபரப்பு வீடியோ..!

Staff Writer

பிரதமர் மோடியை காங்கிரஸ் பெண் எம்பிக்கள் தாக்க முயன்றதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, சம்பவ தினத்தன்று மக்களவையில் பதிவான வீடியோ காட்சிகளை மத்திய அமைச்சர் கிரண் ரிஜூஜூ இன்று வெளியிட்டுள்ளார்.

நாடாளுமன்ற மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது, கடந்த பிப். 4ஆம் தேதி மாலை 5 மணிக்கு பிரதமர் மோடி பதிலளித்து பேச இருந்தார். ஆனால், அவர் அவைக்கு வரவில்லை. இது குறித்து பிப்.5ஆம் தேதி விளக்கம் அளித்த அவைத் தலைவர் ஓம் பிர்லா, "நேற்று மாலை 5 மணிக்கு பிரதமர் மோடி பேச இருந்தார். ஆனால் அவர் நேற்று அவைக்கு வரவில்லை. மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆளுங்கட்சி மூத்த அமைச்சர்கள் மேஜைக்கு அருகே சென்று ஆர்பாட்டம் நடத்தினர். அவர்கள் பிரதமர் மோடியை தாக்க சதி திட்டம் தீட்டினர்.

தமிழக காங். பெண் எம்.பிக்கள் ஜோதிமணி, சுதா உள்ளிட்டோர் பிரதமரை குறி வைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டனர். மக்களவை வரலாற்றில் இதுவரை இல்லாத சம்பவத்திற்கு திட்டமிட்டனர். எனவே நான்தான் அவைக்கு வர வேண்டாம் என பிரதமரிடம் கேட்டுக் கொண்டேன்.” என்று கூறியிருந்தார்.

அவரின் இந்த கருத்து எதிர்க்கட்சியினரை கோபமடையச் செய்தது. இதைத் தொடர்ந்து நேற்று காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் ஓம் பிர்லாவுக்கு நீண்ட கடிதம் ஒன்றை எழுதியிருந்தனர். அதில், “பிரதமர் மோடி அவைக்கு வராததற்குக் காரணம் எங்களால் ஏற்பட்ட எந்த அச்சுறுத்தலும் அல்ல; அது அவரது பயத்தின் வெளிப்பாடு. எதிர்க்கட்சியை எதிர்கொள்ளும் தைரியம் அவருக்கு இல்லை.” என கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில், சம்பவ தினத்தன்று மக்களவையில் பதிவான வீடியோ காட்சிகளை மத்திய அமைச்சர் கிரண் ரிஜூஜூ இன்று (பிப்.10) வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் பெண் எம்பிக்களான ஜோதிமணி, சுதா ஆகியோர் பிரதமர் இருக்கை அருகே பேனர் பிடித்துக் கொண்டு முழக்கமிகின்றனர். அவர்களைப் பார்த்து மத்திய அமைச்சர்கள் கிரிராஜ் சிங், அஸ்வினி வைஸ்ணவ் ஆகியோர் கையெடுத்து கும்பிட்டும், அதை அவர்கள் ஏற்க மறுத்து தொடர் போராட்டத்தில் ஈடுபடும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.