பிரதமர் மோடி 
இந்தியா

“எல்லா மொழிகளையும் மதிப்போம், உள்நாட்டு பொருள்களை வாங்குவோம்” - நாட்டு மக்களுக்கு மோடி கடிதம்!

Staff Writer

தீபாவளி பண்டிகை நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்ட நிலையில், பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது:

“தீபாவளி பண்டிகையின் புனிதமான தருணத்தில், உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அயோத்தியில் ராமர் கோவில் பிரமாண்டமாக கட்டப்பட்ட பிறகு இது இரண்டாவது தீபாவளி.

ராமர் நீதியை நிலைநாட்டவும், அநீதியை எதிர்த்துப் போராடவும் தைரியம் அளித்துள்ளார். இதற்கு ஒரு சின்ன உதாரணத்தை கடந்த மாதம் நாம் அனைவரும் பார்த்தோம். ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்தியா நீதியை நிலைநாட்டியது. அதுமட்டுமின்றி, அநீதியைப் பழிவாங்கியது.

இந்த தீபாவளி குறிப்பாக சிறப்பு வாய்ந்தது, ஏனெனில், முதல் முறையாக, தொலைதூரப் பகுதிகள் உட்பட நாடு முழுவதும் பல மாவட்டங்களில் விளக்குகள் ஏற்றப்பட்டது. இந்த மாவட்டங்களில் நக்சலிசம் வேரோடு அழிக்கப்பட்டுள்ளது. சமீப காலங்களில், பலர் வன்முறையை கைவிட்டு சரணடைந்து வருகின்றனர்.

சமீபத்திய நாட்களில் நாடு அடுத்த தலைமுறை சீர்திருத்தங்களிலும் இறங்கியுள்ளது. நவராத்திரியின் முதல் நாளில், ஜிஎஸ்டி வரிகள் குறைக்கப்பட்டது. இதனால், மக்கள் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை சேமித்து வருகின்றனர்.

பல நெருக்கடிகளைச் சந்திக்கும் உலகில், இந்திய பொருளாதாரம் சிறப்பாக உள்ளது. உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக விரைவில் இந்தியா மாறும்.

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்கி சுதேசி என்று நாம் பெருமையுடன் கூறுவோம்.'ஒரே பாரதம், உன்னத பாரதம்' என்ற உணர்வை ஊக்குவிப்போம். அனைத்து மொழிகளையும் மதிப்போம். தூய்மையைப் பேணுவோம். நமது ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிப்போம். நமது உணவில் சமையல் எண்ணெய் பயன்பாட்டை 10% குறைத்து கொள்ள வேண்டும். யோகா பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இந்த முயற்சிகள் அனைத்தும் நம்மை வளர்ச்சி அடைந்த இந்தியாவை நோக்கிய நமது பயணத்தில் வெற்றியை உருவாக்கும்.

தீபாவளி தினத்தில், ஒரு விளக்கில் மற்றொரு விளக்கு ஏற்றும்போது, அதன் ஒளி குறையாது. மாறாக அது மேலும் வளரும் என்பதையும் நமக்குக் கற்பிக்கிறது. அதே மனப்பான்மையுடன், இந்த தீபாவளியன்று நமது சமூகத்திலும் சுற்றுப்புறத்திலும் நல்லிணக்கம், ஒத்துழைப்பு ஆகியவற்ற பேணுவோம். மீண்டும் ஒருமுறை, உங்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.” இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.