இந்தியா

மேற்குவங்கத்தில் 62%-ஐத் தாண்டியது வாக்குப்பதிவு!

Staff Writer

இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடக்கும் மேற்குவங்க மாநிலத்தில் இன்றைய வாக்குப்பதிவில் மதியம் ஒரு மணி நிலவரப்படி 62.18 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. 

காவல்துறை அமைதியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாகக் கூறினாலும் ஆங்காங்கே வாக்காளர்கள் அச்சுறுத்தப்படுதல், வேட்பாளர்கள் மீது தாக்குதல் என வன்முறை சம்பவங்கள் அரங்கேறிய வண்ணம் உள்ளன.

மொத்தம் 294 சட்டமன்றத் தொகுதிகளில் பதினாறு மாவட்டங்களில் உள்ள 152 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது. இதில், 167 பெண்கள் உட்பட 1478 பேர் போட்டியிடுகின்றனர்.

கடுமையான வெப்பம், காற்றின் ஈரப்பதத்துக்கு இடையிலும் வாக்காளர்கள் காலை 7 மணி முதல் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

தேர்தல் ஆணையத் தகவலின்படி, காலை 9 மணியளவில் வாக்குப்பதிவு 18.76 சதவீதமாக இருந்தது. பின்னர் மெல்ல வேகம் பிடித்து, அடுத்த இரண்டு மணி நேரத்தில் 41.11 சதவீதமாகவும், பிற்பகல் 1 மணியளவில் 62.18 சதவீதமாகவும் வாக்குப்பதிவு அதிகரித்தது.