தமிழகம் உட்பட நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் (SIR) எப்போது நடத்தப்படும் என்கிற அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் நாளை (அக்டோபர் 27) மாலை அறிவிக்க உள்ளது.
சட்டமன்ற, மக்களவைத் தேர்தல்களின் போது வாக்காளர் பட்டியல்களில் திருத்தத்தை தேர்தல் ஆணையம் மேற்கொள்வது வழக்கம். ஆனால் பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாமை தேர்தல் ஆணையம் நடத்தியது. குடியுரிமை சட்டத்தின் கீழ் இந்த வாக்காளர் பட்டியல் திருத்தம் நடத்தப்பட்டது பெரும் சர்ச்சையானது. இந்த நடவடிக்கையால் தலித்துகள், சிறுபான்மையினர் லட்சக்கணக்கானோர் வாக்குரிமையை இழந்துள்ளனர். இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
தற்போது, இதே நடைமுறையை நாடு முழுவதும் செயல்படுத்த இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக நாளை தில்லியில் தேர்தல் ஆணையர்களின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற உள்ளது.
இந்த சந்திப்பில், பீகாரைத் தொடர்ந்து சட்டமன்ற தேர்தல் நடைபெறும் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்க மாநிலங்களில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்கள் எப்போது நடத்தப்படும் என்கிற அறிவிப்பை தேர்தல் ஆணையர்கள் வெளியிட உள்ளனர்.