நீட், ஜேஈஈ போன்ற தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும்போது நீங்கள் கிரீமி லேயர் அல்லாத ஓபிசி அதாவது இதரபிற்படுத்த வகுப்பினரா? ஆம் எனில் அதற்கான சான்றிதழை வையுங்கள் என்பார்கள். ஆண்டு வருமானம் 8 லட்சத்துக்குள் இருந்தால்தான் இந்த சான்றிதழ் என்று மேலோட்டமாக தெரிந்து வைத்திருப்பவர்கள் பலர் இதற்கு விண்ணப்பிப்பதே இல்லை. ஆனால் ஊதிய வருமானம், வேளான் வருமானம் போன்றவற்றுக்கு இதில் விலக்கு இருக்கும் விசயம் பலருக்குத் தெரிவதே இல்லை. அவர்களுக்காகவே இந்த செய்திக்கட்டுரை.
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) 27 % இடஒதுக்கீடு வழங்கப்பட்டாலும், மத்திய அரசின் பணிகளிலும், கல்வி நிறுவனங்களிலும் ஓபிசி பிரிவை சேர்ந்த அனைவருக்கும் இந்த இட ஒதுக்கீடு கிடைக்காது. கிரீமிலேயர் அல்லாதவர்களுக்கே இட ஒதுக்கீடு வழங்கப்படும்.
கிரீமிலேயர் எப்படி நிர்ணயிக்கப்படுகிறது? யாருக்கெல்லாம் ஓபிசி சான்றிதழ் கிடைக்கும், தகுதி உடையவர்கள் இந்தச் சான்றிதழை எப்படிப் பெறுவது?
ஓபிசி பிரிவுகளில், குறிப்பிட்ட வருமான வரம்பிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு மட்டும் இட ஒதுக்கீட்டு பலன்களை வழங்குவதுதான் கிரீமி லேயர் அல்லாத சான்றின் நோக்கம் ஆகும். கிரீமி லேயருக்கான வருமான உச்சவரம்பு பணவீக்க உயர்வுக்கு ஏற்ப அவ்வபோது உயர்த்தப்பட்டு வருகிறது.
அதன்படி கடந்த 2017ஆம் ஆண்டு இந்த உச்ச வரம்பு ஆண்டு வருவாய் ரூ.6 லட்சத்திலிருந்து ரூ.8 லட்சமாக உயர்த்தப்பட்டது.
கிரீமிலேயர் எதன் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது?
பெற்றோரின் வருமானத்தை பொருத்தே பிள்ளைகள் கிரீமிலேயர் பிரிவை சேர்ந்தவரா இல்லையா என்பது முடிவு செய்யப்படுகிறது. விண்ணப்பிக்கும் நபரின் வருமானம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.
எளிதாக சொல்ல வேண்டுமானால் ரூ.8 லட்சத்துக்கும் கீழ் ஆண்டு வருமானம் கொண்டவர்கள் கிரீமிலேயர் அல்லாதவர்களாக கருதப்படுவர். எனினும் இந்த வருமானக் கணக்கீட்டில், விண்ணப்பம் செய்பவரின் ஊதியம், குடும்ப ஊதியம் மற்றும் குடும்பத்திற்கு விவசாயத்திலிருந்து கிடைக்கும் வருமானம் ஆகியவை எடுத்துக் கொள்ளப்படாது. இதர வகை வருமானம் மட்டும் கணக்கில் கொள்ளப்படும். அதாவது, பட்டய கணக்காளர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் போல தொழில் செய்து ஈட்டும் வருமானம், சொத்து விற்பனை மூலம் கிடைக்கும் வருவாய், வாடகை வருவாய், வங்கி வைப்புத் தொகை மூலம் கிடைக்கும் வட்டி என பல்வேறு ஆதாரங்களிலிருந்து கிடைக்கும் வருமானம் ஆகியவை கணக்கில் கொள்ளப்படும். விண்ணப்பிக்கும் மாணவனின் பெற்றோர் வருமானம் ஆண்டுக்கு 8 லட்சத்துக்கு மேல் இருந்தாலும் அவர்கள் மாத ஊதியம் பெறுபவராக இருந்தால் அவர்கள் கிரிமீ லேயர் அல்லாதவர்களாகவே கருதப்படுவர்.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள 4 உதாரணங்களைப் பார்ப்போம்.
உதாரணம்-1
பெற்றோரின் ஆண்டு வருமானம் கீழ்குறிப்பிட்டவாறு இருக்கும் சூழ்நிலையில்,
1) ஊதிய வருமானம் : ரூ.3 இலட்சம்
2) வேளாண்மை வருமானம் : ரூ.4 இலட்சம்
3) இதர வகையில் வருமானம் : ரூ.3 இலட்சம்
மேற்கூறப்பட்ட மொத்த வருமானம் ரூ.10 இலட்சம் என்பதில், ஊதிய வருமானத்தையும், வேளாண்மை வருமானத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாமல், இதர வகையில் உள்ள வருமானத்தை மட்டும் அதாவது ரூ.3 லட்சம் என்பதை கணக்கில் கொண்டு அவர்களுக்கு கிரீமீ லேயர் அல்லாத இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு சாதிச் சான்றிதழ் வழங்கப்படலாம்.
உதாரணம்: 2
பெற்றோரின் ஆண்டு வருமானம் கீழ்குறிப்பிட்டவாறு இருக்கும் சூழ்நிலையில்,-
1) ஊதிய வருமானம் : ரூ.25 இலட்சம்
2) வேளாண்மை வருமானம் : இல்லை.
3) இதர வகையில் வருமானம் : இல்லை
மேற்கூறியதில் ஊதிய வருமானம் மட்டுமே உள்ளது. இந்த வருமானம் ரூ.8 இலட்சத்திற்கு அதிகமாக இருப்பினும், ஊதிய வருமானத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாமல், அவர்களுக்கு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு சாதிச் சான்றிதழ் வழங்கப்படலாம்.
உதாரணம்: 3
பெற்றோரின் ஆண்டு வருமானம் கீழ்குறிப்பிட்டவாறு இருக்கும் சூழ்நிலையில்,-
1) ஊதிய வருமானம் : இல்லை
2) வேளாண்மை வருமானம் : ரூ.50 இலட்சம்
3) இதர வகையில் வருமானம் : இல்லை
மேற் கூறப்பட்டதில் வேளாண்மை வருமானம் மட்டுமே உள்ளது. இந்த வருமானம் ரூ.8 இலட்சத்தை கடந்து இருப்பினும், வேளாண்மை வருமானத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாமல் அவர்களுக்கு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு சாதிச் சான்றிதழ் வழங்கப்படலாம்.
உதாரணம் -4
பெற்றோரின் ஆண்டு வருமானம் கீழ்குறிப்பிட்டவாறு இருக்கும் சூழ்நிலையில்-
1) ஊதிய வருமானம் : ரூ.4 இலட்சம்
2) வேளாண்மை வருமானம் : ரூ.3 இலட்சம்
3) இதர வகையில் வருமானம் : ரூ.8.10 இலட்சம்
கூறப்பட்டதில் இதரவகையில் வருமானம் ரூ.8 இலட்சத்தை கடந்து இருக்கிறது, எனவே சான்றிதழ் வழங்கப்படமாட்டாது.
சான்றிதழுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
கிரீமி லேயர் அல்லாதவருக்கான சான்றிதழை பெறுவதற்கு தங்கள் வசிப்பிடத்துக்கு உரிய வட்டாட்சியரிடம் நேரடியாக சென்று விண்ணப்பிக்கலாம். அல்லது அரசின் இ- சேவை மையமான tnesevai.tn.gov.in என்ற இணையதளத்துக்கு சென்றும் அதற்குரிய ஆவணங்களை சமர்ப்பித்து விண்ணப்பிக்கலாம்.