டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில், காரை ஓட்டியது மருத்துவர் உமர் முகமது தான் என்பது டி.என்.ஏ. பரிசோதனையில் உறுதியாகியுள்ளது.
டெல்லி செங்கோட்டை எதிரே கடந்த 10ஆம் தேதி மாலை வெடிபொருளை மறைத்து எடுத்துச்சென்ற கார் வெடித்துச் சிதறியது. இதில் 13 பேர் பலியானார்கள். 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த கார் வெடிப்பு சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு முகமை தீவிரமாக விசாரித்து வருகிறது.
இந்த விசாரணைக்காக 10 பேர் கொண்ட சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்புக்குழுவினர் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
கார் வெடிப்பு சம்பவத்தில் உமர் முகமது தற்கொலை குண்டாக வெடித்திருப்பார் என கருதப்படுவதால் கார் மற்றும் வெடிப்பு பகுதியில் கிடந்த சதைப்பகுதிகளை எடுத்து, அதை உமர் முகமதுவின் தாயார் டி.என்.ஏ.வுடன் ஒப்பிட நடவடிக்கைககள் எடுக்கப்பட்டன. உமர் முகமது தாயாரிடம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொடுக்கப்பட்டு உள்ளது. அங்கு ஒப்பீட்டு பரிசோதனை நடந்து வந்தது.
இந்த நிலையில், டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில், காரை ஓட்டியது மருத்துவர் உமர் முகமது தான் என்பது டி.என்.ஏ. பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. அவரின் தாயிடம் இருந்து எடுக்கப்பட்ட மாதிரியும், காரில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரியும் 100 சதவீதம் ஒத்துப்போனதையடுத்து உமர் முகமது தற்கொலை குண்டாக வெடித்துள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து உமர் நபிக்கு சொந்தமான மற்றொரு காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த வழக்கின் விசாரணை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது.
8 பேர் 4 நகரங்களில் குண்டுவெடிப்பு நடத்த திட்டமிட்டது புலனாய்வுத்துறை விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தலா 2 பேர் கொண்ட குழுவாக 4 நகரங்களில் குண்டு வெடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், ஒவ்வொரு குழுவும் பல IED குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்த திட்டமிட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.