தமிழகத்தைவிட ஆந்திராவிற்கு தொழில் முதலீடுகள் அதிகம் ஏன் செல்கின்றன என்ற கேள்விக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் கருத்து வைரலாகி உள்ளது.
அண்மையில், இந்திய தொழில்துறை கூட்டமைப்பு, மத்திய வர்த்தக - தொழில்துறை அமைச்சகம், ஆந்திரப் பிரதேச அரசு ஆகியவை இணைந்து 31ஆவது சி.ஐ.ஐ. கூட்டாண்மையின் உச்சி மாநாடு, ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினத்தில் நடைபெற்றன.
இதில், 58-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள், வெளிநாட்டு அமைச்சர்கள், 3800-க்கும் மேற்பட்ட தொழில்துறை தலைவர்கள் பங்கேற்றனர். மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, பியூஷ் கோயல், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் இதில் பங்கேற்றனர். இந்த மாநாட்டின் மூலமாக ரூ. 9.98 லட்சம் கோடி மதிப்பிலான முதலீட்டு உறுதிமொழிகள் கிடைத்துள்ளதாக ஆந்திர மாநில அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அம்மாநாட்டில் தமிழகத்தில் உள்ள ஆட்டோமொபைல், தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களின் விரிவாக்கத் திட்டங்களுக்காக ஆந்திர மாநிலத்தைத் தேர்ந்தெடுப்பது ஏன் என்று ஆந்திர பிரதேசத்தின் முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அளித்த பதில்:
"இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் தொழில் முதலீடுகளை ஈர்க்கப் போட்டியிடுகிறார்கள். ஆனால், எந்த மாநிலத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்பதை முதலீட்டாளர்கள்தான் தீர்மானிக்கிறார்கள்.
நமது மாநிலத்தை நம்பி முதலீடு செய்ய வரும் முதலீட்டாளர்களுக்கு நிறைய ஊக்கத் திட்டங்களைத் கொடுத்தால்தான், அவர்கள் நம்மை தேடி நம்பிக்கையுடன் வருவார்கள். முதலீட்டை பொறுத்தவரை அதற்கு ஸ்ரேட்டஜி மிகவும் முக்கியம். அதன்படி தான் நான் செயல்படுகிறேன்.
உங்களுக்கு மசாலா வேண்டும். எனக்கு முடிவுகள் வேண்டும்." என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
இதைதொடர்ந்து, இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் த.வெ.க. செய்தித்தொடர்பாளர் சத்யகுமார் தனது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
"சந்திரபாபு நாயுடுவின் இந்தக் கருத்து தமிழ்நாட்டைக் குறைத்து மதிப்பிடுவது போல் உள்ளது. பா.ஜ.க. உடனான கூட்டணியால் ஆந்திராவுக்கு அரசியல் சாதகங்கள் இருக்கலாம், ஆனால் தமிழ்நாட்டின் பலம் அதன் மக்களும் தொழில் கட்டமைப்பும் தான்.
வெறும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவதை விட, எந்த மாநிலம் அவற்றை உண்மையான தொழிற்சாலைகளாகவும் வேலைவாய்ப்புகளாகவும் மாற்றுகிறது என்பதை ஒப்பிட்டுப் பார்க்கலாம்." என்று த.வெ.க. செய்தித்தொடர்பாளர் சத்யகுமார் தெரிவித்துள்ளார்.