நாடாளுமன்ற கூட்டத்தொடர் (மாதிரிப்படம்) 
இந்தியா

டிசம்பர் 1 முதல் 19 வரை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்!

Staff Writer

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 1ஆம் தேதி 19ஆம் தேதி வரை நடக்கும் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை நடத்த அனுமதி அளித்துள்ளார். அதன்படி டிசம்பர் 1ஆம் தேதி முதல் டிசம்பர் 19ஆம் தேதி வரை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. நமது ஜனநாயகத்தை வலுப்படுத்துவது மற்றும் மக்களின் விருப்பங்களை நிறைவேற்றும் வகையிலான ஆக்கப்பூர்வ அதேநேரத்தில் அர்த்தமுள்ள அமர்வை எதிர்நோக்குகிறோம்'' என்று கூறியுள்ளார்.

பீகார் சட்டப்பேரவை தேர்தல் முடிந்ததும் இந்த கூட்டத் தொடர் நடைபெற இருப்பதால் பல முக்கிய பிரச்னைகள் புயலை கிளப்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக ராகுல் காந்தியின் ஓட்டுத் திருட்டு குற்றச்சாட்டை காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் பூதாகரமாக்கலாம். அதேபோல், தமிழ்நாடு உட்பட 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் வாக்காளர் பட்டியில் சிறப்பு தீவிர திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள் உட்பட பல கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதனால் அதனை முன்வைத்து எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்யலாம். இதனால், குளிர்கால கூட்டத்தொடரின்போது பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.