‘’உங்களை எல்லாம் ஞாயிற்றுக் கிழமைகளிலும் வேலை செய்ய வைக்க முடியவில்லை என்பது எனக்கு வருத்தம்தான். அப்படி வேலை செய்ய வைத்தால் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும். ஏன்னா, நானும் ஞாயிற்றுக் கிழமைகளில் வேலை செய்கிறேன்!
வீட்டுல ஒக்காந்து என்னாப்பா செய்வீங்க? எவ்வளவு நேரம்தான் பொண்டாட்டிய பாத்துட்டே இருப்பீங்க? எவ்வளவு நேரம் மனைவியும் கணவனையே பாத்துட்டு இருக்கமுடியும்?
சீனாக்காரர்கள் வாரத்துக்கு 90 மணி நேரம் வேலை செய்கிறார்கள். உலகின் உச்சத்துக்கு செல்லவேண்டுமானால் நீங்க 90 மணி நேரம் வேலை செய்யணும். செய்ங்க..”
இப்படி தன் நிறுவன ஊழியர்களிடம் பேசி வம்பை வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறார் எல் அண்ட் டி நிறுவனத் தலைவர் எஸ். என். சுப்ரமணியன். இந்த வீடியோ வெளியாகி வைரல் ஆனது.
‘உங்க வீட்டில் வேலைகளைச் செய்ய ஏழெட்டு வேலைக்காரங்க இருப்பாங்க. நீங்க ஞாயிற்றுக் கிழமையும் வேலை செய்யலாம். மத்தவங்க அப்படியா ?’ என்று ஆயிரக்கணக்கில் சமூக ஊடகத்தில் எதிர்வினைகள் வந்துள்ளன.
எல் அண்ட் டி நிறுவன ஊழியர்களின் சராசரி ஆண்டு வருமானம் 9.55 லட்சம் ரூபாய் (2024). ஆனால் சுப்ரமணியம் சம்பளமாகப் பெற்றது 51 கோடி ரூபாய் என்று பத்திரிகை ஒன்று தன் பங்குக்கு செய்தி போட்டு திரியைப் பற்ற வைத்துள்ளது.
இந்த சராசரி சம்பளத்தைவிட சுப்ரமணியம் சம்பளம் 534 மடங்கு அதிகம்.
இவ்வளவு ரூபா வாங்கிற நீங்க 90 மணி நேரம் வேலை செய்றதுல தப்பே இல்ல.., ஆனால் எங்க கத? என்று அவரைப் பொளந்து வருகிறார்கள் சமூக ஊடகத்தில்.
நடிகை தீபிகா படுகோன், கோடீசுவரர் ஹரிஷ் கோயங்கா போன்றோர் கூட அவரைக் கண்டித்துள்ளனர்.