இந்தியா

அரசு நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். பாடல்… பினராயி விஜயன் எதிர்ப்பு!

Staff Writer

வந்தே பாரத் ரயில் சேவையின் தொடக்க விழாவில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பாடல் (கான கீதம்) பாடப்பட்டதற்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியிலிருந்து எர்ணாகுளம்-பெங்களூர் உள்பட நான்கு புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார்.

இந்த தொடக்க விழாவின்போது, ஆர்எஸ்எஸ் அமைப்பின் பாடலை மாணவர்கள் பாடினர். இந்த நிலையில், அரசு நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பாடலை மாணவர்களைப் பாட வைத்ததற்கு பினராயி விஜயன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: “எர்ணாகுளம் - பெங்களூரு வந்தே பாரத் சேவையின் தொடக்க விழாவில் மாணவர்களை ஆர்எஸ்எஸ் பாடலை பாட வைத்த தெற்கு ரயில்வேயின் செயல் கண்டிக்கத்தக்கது.

மற்ற மதங்களுக்கு எதிரான வெறுப்பைப் பரப்பும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பாடலை, அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வத் திட்டத்தில் சேர்ப்பது என்பது அரசியலமைப்புக் கொள்கைகளை மீறுவதாகும்.

இதுபோன்ற நடவடிக்கைகள் அரசாங்க நிகழ்வுகளின் மதச்சார்பற்ற தன்மையை குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றன. இதன் பின்னணியில் மதச்சார்பின்மையை அழிப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு குறுகிய அரசியல் மனநிலை தெரிகிறது.

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான ரயில்வேயைக்கூட, தங்கள் வகுப்புவாத அரசியல் பிரசாரத்திற்காக ஆர்எஸ்எஸ் பயன்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது.

இந்த ஆர்எஸ்எஸ் பாடலை சமூக ஊடகங்களில் தேசபக்தி பாடல் என்று தெற்கு ரயில்வே பகிர்வதன் மூலம், தன்னை கேலி செய்தது மட்டுமல்லாமல், இந்திய தேசிய இயக்கத்தையும் கேலி செய்துள்ளது.

சுதந்திரப் போராட்டத்தின்போது, இந்தியாவின் மதச்சார்பற்ற தேசியவாதத்தின் மூலமாகப் பணியாற்றிய ரயில்வே, இப்போது சுதந்திரப் போராட்டத்துக்கு துரோகம் இழைத்த ஆர்எஸ்எஸ்ஸை ஆதரிக்கிறது” என்று தெரிவித்தார்.