நீதிபதி அதுல் ஸ்ரீதரன் 
இந்தியா

சர்ச்சைக்கு உள்ளானது ம.பி. மூத்த நீதிபதி இடமாற்றம்!

Staff Writer

மத்தியப்பிரதேச மூத்த நீதிபதி அதுல் ஸ்ரீதரன் உத்தரப்பிரதேச மாநிலம், அலகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனால் அவர் தன் பணிமூப்பை இழக்கும் நிலை ஏற்படும் எனக் கூறி, சர்ச்சை எழுந்துள்ளது.  

ம.பி. உயர்நீதிமன்றத்திலிருந்து சத்தீஸ்கருக்கு அவரை மாற்ற கடந்த ஆகஸ்ட்டில் உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்திருந்தது. அதைப் பரிசீலனை செய்யுமாறு மைய சட்ட அமைச்சகம் கேட்டுக்கொண்டது. அதையடுத்து நேற்றுமுன்தினம் கூடிய கொலீஜியம், நீதிபதி அதுல் ஸ்ரீதரனை உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத்துக்கு மாற்றம் செய்ய ஒப்புக்கொண்டது.

கோபால் சுப்பிரமணியத்திடம் தில்லியில் உச்சநீதிமன்றம், உயர் நீதிமன்றங்களில் பணியாற்றிய இவர், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு 2001இல் இந்தூருக்குத் திரும்பினார். அங்கு தனியாக வழக்குரைஞர் பணியைத் தொடங்கியவர், அரசு வழக்குரைஞராகவும் செயல்பட்டுள்ளார்.

2018இல் உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டவர், 2023இல் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு மாற்றல் கேட்டுச் சென்றார். தன் மகள் வழக்குரைஞர் தொழிலுக்குள் வந்ததாகக் கூறியே அவர் மாற்றல் பெற்றார்.

கடந்த மார்ச்சில் காஷ்மீரிலிருந்து மீண்டும் மத்தியப்பிரதேசத்துக்கு அதுல் ஸ்ரீதரன் இடம்மாற்றப்பட்டார். சத்தீஸ்கருக்கு அவரை மாற்ற முன்னதாக கொலீஜியம் தீர்மானித்திருந்த நிலையில், அரசின் புதிய கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது.