சுதாகர் ரெட்டி 
இந்தியா

சுதாகர் ரெட்டி காலமானார்!

Staff Writer

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி தன் 83ஆவது வயதில் ஐதராபாத்தில் காலமானார். 

ஐதராபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று இரவு 9 மணியளவில் அவர் காலமானார்.

இவரின் மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

யார் இந்த சுதாகர் ரெட்டி?

தற்போதைய தெலுங்கானா மாநிலம், மகபூப்நகர் மாவட்டத்தில், விடுதலைப் போராட்ட வீரர் குடும்பத்தில் 1942 மார்ச் 25 ஆம் தேதி பிறந்தவர், எஸ். சுதாகர் ரெட்டி.

கர்னூல் நகராட்சி உயர்நிலைப்பள்ளியிலும், கிருஸ்துவ மேல் பள்ளியிலும் பள்ளிக்கல்வி பெற்றவர். தொடர்ந்து ஐதராபாத் நகரில் உள்ள உஸ்மானிய பல்கலைக் கழகத்தில் கல்லூரிக் கல்வியும், சட்டப்படிப்பும் முடித்தவர்.

கர்னூலில் பள்ளிக் கல்வி பெற்று வந்த காலத்தில், அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தில் இணைந்து பள்ளியின் அடிப்படை வசதிக்கான கோரிக்கைகளுக்காக போராட்டத்தைத் தொடங்கியவர்.

1965-66 புதுச்சேரியில் நடைபெற்ற அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் 17-வது தேசிய மாநாட்டில் அதன் பொதுச் செயலாளர் பொறுப்புக்குத் தேர்வு செய்யப்பட்டவர்.

ஒன்றுபட்ட ஆந்திர மாநில விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர், இந்தியக் கம்யூனிஸ்ட்டு கட்சியின் ஆந்திர மாநிலச் செயலாளர் என படிப்படியாக பல பொறுப்புகளில் செயல்பட்டு, கட்சியின் தேசிய துணைப் பொதுச் செயலாளர், பொதுச்செயலாளர் ஆகிய பொறுப்புகளுக்கும் உயர்ந்தவர்.

பல்வேறு நாடுகளின் கம்யூனிஸ்ட்டு கட்சிகளுடன் தோழமை உறவை வலுப்படுத்தி வந்தவர். உலக கம்யூனிஸ்ட்டு இயக்கத்திலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பு செலுத்தியவர்.

கட்சி எல்லைகளைக் கடந்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுவாழ்வுப் பிரமுகர்கள், துறை சார்ந்த நிபுணர்களின் நன்மதிப்பைப் பெற்றவர்.

இவரின் வாழ்விணையர் டாக்டர் பி.வி.விஜயலட்சுமியும் தொழிற்சங்க அரங்கின் முன்னணி தலைவராக திகழ்ந்து வருபவர்.

நல்கொண்டா நாடாளுமன்றத் தொகுதியிலிருந்து 1998, 2004 ஆகிய ஆண்டுகளில் நாடாளுமன்ற மக்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டவர். தொழிலாளர் நலன் தொடர்பான நிலைக் குழுவின் தலைவராக இருந்து, அமைப்புசாரா தொழிலாளர்களின் சமூக நலத்திட்டங்களை முன்னெடுத்தவர்.

ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொல்லம் கட்சி மாநாட்டில் தாமாக முன்வந்து பொறுப்பில் இருந்து விலகிக் கொண்டார்.

ஐதராபாத் நகரில் தங்கியிருந்த நிலையில் சமூக ஊடகங்கள் வழியாக கட்சியின் கொள்கை நிலைகளையும், மார்க்சிய- லெனினிய தத்துவத்தையும் தொடர்ந்து பரப்புரை செய்து வந்தவர்.

”சுதாகர் ரெட்டி மறைவு ஒட்டு மொத்த கம்யூனிஸ்டு இயக்கத்துக்கும், மதச்சார்பற்ற ஜனநாயக பாதுகாப்புப் போராட்டத்துக்கும் பேரிழிப்பாகும். எந்த வகையிலும் எளிதில் ஈடு செய்ய இயலாதது. தன்னை மறுப்பின் அடையாளமாக, அர்ப்பணிப்பு உணர்வுடன் கடைசி வரை பணியாற்றிய தோழர் எஸ். சுதாகர் ரெட்டி மறைவுக்கு, இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு செவ்வணக்கம் கூறி, ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.” என சிபிஐ கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.