உச்ச நீதிமன்றம் 
இந்தியா

சோசியல் மீடியா... தலைமை நீதிபதி- உச்சநீதிமன்றத்தில் நடந்த வாதம்!

Staff Writer

சமூக ஊடகங்கள் கட்டுத்தறி இல்லாமல் செயல்படும் கடிவாளம் இல்லாத குதிரைகள் என்று உச்சநீதிமன்றத்தில் விவாதம் நடைபெற்றது. 

தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் நேற்று அளித்த ஒரு தீர்ப்பில், ஏழு அடி உடைந்த சிலை ஒன்றை நிறுவச்சொன்ன மனுவைத் தள்ளுபடி செய்தார். 

இது முழுக்க முழுக்க விளம்பரத்துக்காகத் தொடுக்கப்பட்ட வழக்கு எனக் கடிந்துகொண்ட அவர், மனுதாரரைப் பார்த்து, “நீங்கள்தான் விஷ்ணுவின் மிகத் தீவிரமான பக்தர் எனக் கூறுகிறீர்கள். அவரிடமே இதற்குத் தீர்வு கேட்கலாமே? போய் இதற்காக பிரார்த்தனை செய்யுங்களேன்.” என்று குறிப்பிட்டார். 

மனுவைத் தள்ளுபடி செய்ததைவிட அவர் கூறிய கருத்துகளைத்தான் மனுதாரர் ஆதரவாளர்கள் பிடித்துக்கொண்டனர். 

இப்படி கருத்துக்கூறியது தங்களின் மனதைப் புண்படுத்துவிட்டதாக அவர்கள் சமூக ஊடகங்களில் வரிந்துகட்டி எழுதினர். 

அதைத் தொடர்ந்து, இன்று, வேறொரு வழக்கில் விசாரணை நடைபெற்றபோது, ”என்னைப் பற்றி சமூக ஊடகங்களில் பலவாறான கருத்துகள் வந்திருப்பதாகச் சொன்னார்கள். நான் அனைத்து மதங்களையும் மதிக்கிறேன்.” என்று கூறினார் தலைமை நீதிபதி கவாய். 

முன்னதாக, அரசின் தலைமை வழக்கறிஞர் துசார் மேத்தா வாதிடும்போது, “நியூட்டனின் விதிப்படி ஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர்வினை உண்டு. ஆனால் இப்போதெல்லாம் ஒவ்வொரு செயலுக்கும் பொருத்தமில்லாத எதிர்வினைதான் உண்டு.” என குறைபட்டுக்கொண்டார். 

மூத்த வழக்கறிஞர் கபில் சிபலோ, சமூக ஊடகம் கட்டுத்தறியில்லாத குதிரையாக உள்ளது என்று சாடினார்.