டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவராக, சந்திரசேகரனின் பதவிக்காலம் நீட்டிப்பு குறித்த தீர்மானம் சட்டபடி செல்லாது என்று டாடா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டு முதல் டாடா குழுமத்தின் தலைவராகப் பதவி வகித்துவரும் சந்திரசேகரனின் பதவிக்காலம் வரும் 2027ஆம் ஆண்டு பிப்ரவரியுடன் முடிவடைகிறது.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற டாடா சன்ஸ் குழுமத்தின் நிர்வாகக் கூட்டத்தில், டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவராக சந்திரசேகரன், மேலும் 5 ஆண்டுகள் தொடர்வார் என்று தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக, வரும் 2027ஆம் ஆண்டிற்குப் பிறகு தனது பதவிக்காலத்தை நீட்டிக்க வேண்டாம் என்ற முடிவை எடுத்துள்ளதாகவும், டாடா சன்ஸ் குழுவின் வாரியத்திடம் இந்த முடிவை முன்னதாகவே தெரிவித்துள்ளதாகவும் சந்திரசேகரன் கடந்த மாதம் கூறியிருந்தார்.
அதைத் தொடர்ந்து, வேறு புதிய தலைவரைத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்த டாடா சன்ஸ் குழுமம், திடீர் திருப்பமாக மூன்றாவது முறையாக, மீண்டும் சந்திரசேகரனைத் தலைவராக மறுநியமனம் செய்ய டாடா சன்ஸ் குழுமம் முடிவு செய்தது.
இந்தத் தீர்மானத்திற்கு, டாடா சன்ஸ் குழுமத்தில் 66% பங்குகளை வைத்திருக்கும் டாடா அறக்கட்டளை எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக சந்திரசேகரன் அறிவித்தை ஏற்றுக்கொண்டதாகவும், புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க தேர்வுக்குழுவை அமைக்குமாறு டாடா சன்ஸ் குழுமத்திற்கு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளதாகவும் டாடா அறக்கட்டளை தெரிவித்தது.
மேலும், டாடா அறக்கட்டளை நியமித்த இயக்குநர்களில் ஒருவரான நோயல் டாடா இந்த பதவி நீட்டிப்பு தீர்மானத்திற்கு எதிர்த்து வாக்களித்திருப்பதால், இது சட்டப்படி செல்லாது என்று டாடா அறக்கட்டளை தெரிவித்திருக்கிறது.