ஓணம் மது விற்பனை 
இந்தியா

ரூ.826 கோடியை எட்டிய ஓணம் மது விற்பனை!

Staff Writer

மலையாளிகளின் உலகளாவிய திருவிழாவாக மாறிவிட்ட ஓணம் திருவிழாவை முன்னிட்டு, கேரளத்தில் மது விற்பனை 826 கோடி ரூபாயை எட்டியது. 

தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவின் பல மாநிலங்களிலும் மது ஆறாக ஓடுகிறது. சேட்டன்சேச்சிகள் நாட்டிலும் இதற்கு எந்தக் குறையும் இல்லை. நாட்டிலேயே அதிகம் படித்த மாநிலமான கேரளத்தில் குடிநோயாளிகளின் எண்ணிக்கையும் கூடுதலாக உள்ளது.

உள்நாட்டு மதுவகைகளான கள், சாராயத்துக்கு அங்கு தடை இல்லை என்பதால், வெளிநாட்டு வகை மதுபானங்களுடன் கேரளத்து மதுவகைகளும் விற்பனையில் சக்கைபோடு போடுகின்றன.

இந்த ஆண்டு ஓணம் திருவிழா காலத்தில், கடந்த மாதம் 25ஆம் தேதி முதல் நேற்றுமுன்தினம்வரையிலான 10 நாள்களில், கடந்த ஆண்டு இதே காலகட்டத்தைவிட, 6.38 சதவீதம் கூடுதலாக மது விற்பனை ஆகியுள்ளது. அதாவது, அங்கு 776.26 கோடி ரூபாய்க்கு சென்ற ஆண்டு மது விற்கப்பட்டுள்ளது.

உத்ராடம் நாளான கடந்த வியாழன் அன்று மட்டும், கேரள அரசின் பெவ்கோ மதுக்கடைகளில் 137.64 கோடி ரூபாய்க்கு மது விற்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு விற்பனையான மதுவின் அளவைவிட இது 9.23 சதவீதம் கூடுதல். கடந்த ஆண்டு விற்பனை ரூ.126.01 என்று கேரள அரசுத் தரப்பின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

மாநிலத்திலேயே மிக அதிகமாக, கொல்லம் கிட்டங்கியோடு இணைந்த கருணாகப்பள்ளி மதுக்கடையில்தான் 1.46 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.

அடுத்ததாக, கவனாடு ஆசிரமம் கடையில் 1.24 கோடி ரூபாயும், மலப்புரம் குட்டிப்பலா எடப்பல் மதுக்கடையில் 1.11 கோடி ரூபாய்க்கும் மது விற்பனை ஆகியுள்ளது.