தொகுதி மறுவரையறை மசோதா உட்பட மூன்று சட்டவரைவுகள் மீதான விவாதம் மக்களவையில் இன்றும் தொடர்ந்தது. இன்று பிற்பகலில் எதிர்க்கட்சித்தலைவர் இராகுல்காந்தி பேசினார்.
அப்போது, அவர், பிரதமர் மோடியின் பெயரைக் குறிப்பிடாமல், பணமதிப்பு இழப்பு, பாலக்கோட், ஆப்பரேசன் சிந்தூர் ஆகியவற்றின் வித்தைக்காரர் அம்பலப்பட்டு விட்டார் என்று குறிப்பிட்டதும், பா.ஜ.க. தரப்பில் கடும் எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன.
அமைச்சர்கள் கிர்ரன் ரிஜுஜு, இராகுலின் வார்த்தை அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட வேண்டிய அநாகரிக வார்த்தை என்று அவை விதிகள் நூலில் குறிப்பிட்ட பக்கத்தில் உள்ளதைப் படித்துக் காட்டினார்.
மூத்த அமைச்சர் இராஜ்நாத்சிங், இராகுல் காந்தி பிரதமரைப் பற்றிப் பேசியது மோசமானது; அதை அவைக்குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
பா.ஜ.க.வினர் தொடர்ந்து கூச்சலிட்டபடி இருந்தனர். அவைத்தலைவர் ஓம்பிர்லா, இராகுலிடம் கண்டிப்பாக இப்படி இனி பேசக்கூடாது என்றும் விவாதப் பொருளைப் பற்றிப் பேசும்படியும் கூறினார். அதை இராகுல் ஏற்றுக்கொண்டார்.
இதனிடையே, இராகுல் தன் பேச்சில், எல்லாரும் தாய், சகோதரிகள், மனைவிகளிடமிருந்து கற்றுக்கொண்டிருக்கிறார்கள்; எனக்கும் பிரதமருக்கும் மனைவி பிரச்னை இல்லை எனக் கூறவும், அவையில் சிரிப்பலைகள் எழுந்தன.