கனிமொழி எம்.பி 
செய்திகள்

இந்தியாவின் தேசிய மொழி... ஸ்பெயினில் பலத்த கைத்தட்டல் வாங்கிய கனிமொழி பேச்சு

Staff Writer

வேற்றுமையில் ஒற்றுமையே இந்தியாவின் தேசிய மொழி என்று ஸ்பெயினில் திமுக எம்.பி. கனிமொழி பேசிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி உள்ளது.

பெகல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா நடத்திய 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை உலக நாடுகளுக்கு எடுத்துரைக்க ஏழு எம்.பி.க்கள் தலைமையில் அனைத்துக் கட்சிக் குழுக்கள் ஒன்றிய அரசால் அமைக்கப்பட்டன.

இதற்காக அமைக்கப்பட்டுள்ள ஏழு அனைத்துக்கட்சி பிரதிநிதி குழுக்களில், திமுக துணைப் பொதுச்செயலாளரும் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழி தலைமையிலான குழுவும் ஒன்று. ரஷ்யா, ஸ்லோவேனியா, கிரீஸ், லாட்வியா உள்ளிட்ட நாடுகளில் தங்களது பயணத்தை முடித்துவிட்டு, இக்குழுவினர் கடந்த சனிக்கிழமை ஸ்பெயின் நாட்டின் தலைநகரமான மாட்ரிட் நகரை சென்றடைந்தனர்.

நேற்று ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் நடந்த அந்நாட்டு பிரதிநிதிகளுடனான கூட்டத்தில் கலந்துகொண்ட கனிமொழி எம்.பி தலைமையிலான இந்திய எம்.பிக்கள் குழு, பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு குறித்த நிலைப்பாட்டை எடுத்துரைத்தனர்.

அப்போது பேசிய கனிமொழி கருணாநிதி எம்.பி: இன்று மதியம் ஸ்பெயின் நபர் ஒருவரை சந்தித்தோம். அவர் தாஜ் ஹோட்டல் தாக்குதலின் போது அங்கு இருந்தவர்.

பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் மும்பை தாஜ் ஹோட்டல் தாக்கப்பட்டபோது, இந்தியா ஒரு தெளிவான நிலைப்பாட்டை எடுத்துக் கொண்டது. அந்த நிலைப்பாட்டின்படி, பயங்கரவாதத்திற்கும், பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நடவடிக்கைகளையும் வேறுபடுத்தி பார்க்க முடியாது என்று இந்தியா அறிவித்துள்ளது. இந்திய குடிமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து, ஒரே குரலில், நமது அரசு மற்றும் நமது மக்களின் செய்தியை உலகிற்கு எடுத்துச் செல்கிறோம்.

இந்தியா பழிவாங்க விரும்பவில்லை, நீதி கேட்கிறது. எனவே, இந்த செய்தியை நாங்கள் எடுத்துச் செல்கிறோம். இந்தியாவை யாராலும் மிரட்ட முடியாது. இந்தியாவை யாராலும் அடக்க முடியாது என்பதை உலகம் புரிந்துகொள்ள வேண்டும் என்பதே எங்களின் விருப்பம்.

வேற்றுமையில் ஒற்றுமையே இந்தியாவின் தேசிய மொழி. இதே செய்தியையே எங்களின் பிரதிநிதிகள் குழு உலகிற்கு எடுத்துச் செல்கிறது. அதுதான் இன்றைய மிக முக்கியமான விஷயம் என்று நான் நினைக்கிறேன்.” என்று பேசினார்.

இதில், இந்தியாவின் தேசிய மொழி வேற்றுமையில் ஒற்றுமை என்பதுதான் என்று அவர் பேசியது சமூக ஊடகத்தில் வைலாகி வருகிறது.