ஈரானின் அரசு தொலைக்காட்சி நிலையத்தின் மீது இஸ்ரேல் பாதுகாப்புப் படை ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் மூன்று ஊழியர்கள் பலியானதாக கூறப்படுகிறது.
ஈரானின் அணு சக்தி நிலையங்கள், ராணுவ தளவாடங்கள், ராணுவ தளபதிகள், அணுசக்தி விஞ்ஞானிகளைக் குறிவைத்துக் கடந்த வெள்ளிக்கிழமை முதல் ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ என்ற பெயரில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதற்கு பதிலடி தரும் வகையில், ஈரானும் பதில் தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளதால், இரு நாடுகளும் மாறிமாறி ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், டெஹ்ரானில் உள்ள ஈரான் இஸ்லாமிய குடியரசு ஒளிபரப்பு தொலைக்காட்சி (ஐஆர்ஐபி) மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது.
நேரலை ஒளிபரப்பில் செய்தி வாசிப்பாளர் செய்தி வாசித்துக் கொண்டிருக்கும்போது நடத்தப்பட்ட தாக்குதலால், கட்டடம் குலுங்கி கரும்புகை எழுந்த நிலையில், செய்தி வாசிப்பாளர் அலறியடித்து ஓடியுள்ளார்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், இந்த தாக்குதலில் 3 ஊழியர்கள் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.