ஆதவ் அர்ஜுனா - விஜய் 
செய்திகள்

த.வெ.க.வில் இணையும் ஆதவ் அர்ஜுனா?

Staff Writer

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஆதவ் அர்ஜுனா தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

'வாய்ஸ் ஆப் காமன்' என்ற நிறுவனத்தை நடத்தி வரும் அர்ஜுனா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் விசிகவில் இணைந்தார். அங்கு அவருக்கு துணைப்பொதுச்செயாலர் பதவி வழங்கப்பட்டது. இவர், திமுக கூட்டணியில் விசிக உள்ள நிலையில், திமுகவை கடுமையாக விமர்சித்து பேட்டிகள் கொடுத்து வந்தார். கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதற்காக அவர் விசிகவிலிருந்து நீக்குவதாக திருமாவளவன் அறிவித்தார்.

இந்நிலையில், அவர் விஜய்யின் த.வெ.க.வில் இணைந்து செயல்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது.

சமீபத்தில் அம்பேத்கர் குறித்த புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் த.வெ.க. தலைவர் விஜய்யும் ஆதவ் அர்ஜுனாவும் ஒரே மேடையில் தோன்றினர். விசிக தலைவர் தொல். திருமாவளவன் பங்கேற்க மறுத்த அந்த விழாவை ஆதவ் அர்ஜுனாவின் வாய்ஸ் ஆப் காமன்ஸ் நிறுவனம் ஒருங்கிணைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.