கங்கை அமரன் 
செய்திகள்

‘பணத்துக்காக காப்பிரைட் பிரச்சனையா?’ – கடுமையாக விமர்சித்த கங்கை அமரன்!

Staff Writer

“இளையராஜாவின் பாடலுக்கு அவரிடம் அனுமதி கேட்டால் இலவசமாகவே பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று சொல்லி இருப்பார்” என்று கங்கை அமரன் கூறியுள்ளார்.

இசையமைப்பாளர் இளையராஜா சமீபகாலமாகவே தன்னுடைய பாடலை தன் அனுமதி இன்றி யாரும் படங்களில் பயன்படுத்தக் கூடாது என்று கூறி வருகிறார். மீறி பயன்படுத்தினால் அவர்கள் மீது வழக்கு தொடர்வேன் என்று தெரிவித்திருக்கிறார். தற்போது, குட் பேட் அக்லி திரைப்படத்தில் தன்னுடைய மூன்று பாடல்கள் பயன்படுத்தி இருப்பதால், இளையராஜா நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதற்கு பட குழுவினர் நாங்கள் சம்பந்தப்பட்ட ஆடியோ கம்பெனியில் என்ஓசி வாங்கி விட்டோம் என்று தெரிவித்திருக்கிறார்கள்.

இது பற்றி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கங்கை அமரன், என் அண்ணனிடம் இல்லாத பணமா? அவரிடம் கொட்டி கிடக்குது. செலவழிக்க முடியாமல் தவித்து வருகிறோம். இப்படி இருக்கும்போது பணத்துக்காக இந்த காப்பிரைட் பிரச்சனையை அண்ணன் கொண்டு வருவார் என்று சொல்வதெல்லாம் நியாயமே இல்லை.

நீங்க சொந்தமா பாட்டு போடுங்க. அப்படியே நீங்க பாட்டு போட்டும் ஜெயிக்கலையே. நாங்க போட்ட பாட்டை பார்த்து தானே மக்கள் ரசிக்கிறார்கள், கைதட்டுகிறார்கள். அப்போ அந்த பாட்டில் எங்களுக்கு பங்கு இருக்கிறதுதானே? அதைத்தான் அண்ணன் கேட்கிறார். அவரிடம் முன்னாடியே அனுமதி வாங்கி இருந்தால் கண்டிப்பாக அவர் மறுத்திருக்க மாட்டார் இலவசமாகவே பயன்படுத்திக்கோங்க என்று சொல்லி இருப்பார் என்று கங்கை அமரன் சொல்லிக் கொண்டிருக்கும்போது பத்திரிக்கையாளர் ஒருவர் உங்களிடம் அவ்வளவு காசு இருந்தால் ஏன் மத்தவங்களுக்கு கொடுத்து உதவலாமே என்று கேட்டிருக்கிறார்.

எதற்கு நாங்கள் ஏன் மத்தவங்களுக்கு கொடுக்கணும்? நாங்க உழைச்சி சம்பாதித்தது எங்களுக்கு பின்னாடி எங்களுடைய சந்ததியினர் பயன்படுத்துவார்கள். நீங்களும் அதே மாதிரி உழைச்சி சம்பாதிங்க. நாங்களும் உதவி செய்து கொண்டிருக்கிறோம். ஆனால் அதை வெளியே சொல்வதில்லை என்று கங்கை அமரன் பேசியிருக்கிறார்.