திருச்சி சிவா - செய்தியாளர் சந்திப்பு 
செய்திகள்

ஜெகதீப் தன்கர் கருத்துகள் நெறிமுறையற்றவை -  திருச்சி சிவா

Staff Writer

உச்சநீதிமன்றத் தீர்ப்பு குறித்த குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் தன்கர் கருத்துகள் நெறிமுறையற்றவை திமுக எம்.பி. திருச்சி சிவா விமர்சித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இரண்டாவது முறையாக நிறைவேற்றி அனுப்பப்பட்ட 10 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததால், அவற்றுக்கு அரசியல் சாசனத்தின் 142-வது பிரிவை பயன்படுத்தி உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்தது.

அத்துடன் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் ஆளுநருக்கு காலக்கெடு நிர்ணயித்த நீதிபதிகள், ஆளுநரால் அனுப்பி வைக்கப்படும் மசோதாக்கள் மீது முடிவு எடுக்க குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு நிர்ணயித்தனர். இந்த தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்கதாக கருதப்படுகிறது.

குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தல் வழங்கியதை துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் கடுமையாக சாடினார். 

“சட்டம் இயற்றும், நிர்வாக நடைமுறையை செயல்படுத்தும், சூப்பர் நாடாளுமன்றமாக செயல்படும் நீதிபதிகள் நம்மிடம் இருக்கிறார்கள். நாட்டின் சட்டம் அவர்களுக்கு பொருந்தாது என்பதால் அவர்களுக்கு எந்த பொறுப்பும் இல்லை.

அரசியல் சட்டப்பிரிவு 142, ஜனநாயக சக்திகளுக்கு எதிரான ஒரு அணு ஏவுகணையாக மாறி இருக்கிறது. அது நீதித்துறையிடம் எப்போதும் இருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பில் குடியரசுத் தலைவருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டு உள்ளது. நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம்? நாட்டில் என்ன நடக்கிறது?

இந்திய குடியரசுத் தலைவர் பதவி மிகவும் உயர்ந்த ஒரு பதவி. எந்த அடிப்படையிலுல் குடியரசுத் தலைவருக்கு அறிவுறுத்தும் நிலை இருக்கக்கூடாது. அரசியலமைப்பின் கீழ் உங்களுக்கு உள்ள ஒரே உரிமை, பிரிவு 145(3)-ன் கீழ் அரசியலமைப்பை விளக்குவது மட்டுமே. அதுவும் 5 நீதிபதிகள் அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் அதில் இருக்க வேண்டும்.” இவ்வாறு துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் மாநிலங்களவை பயிற்சியில் பங்கேற்றவர்கள் மத்தியில் பேசும்போது ஆவேசமாக பேசினார்.

இந்தநிலையில், ஜகதீப் தன்கரின் பேச்சு விமர்சனத்துக்குள்ளான நிலையில், அவருக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர்கள் தங்களின் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஜகதீப் தன்கருக்கு கண்டனம் தெரிவித்து திமுகவின் துணைப் பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி சிவா எக்ஸ் தளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "அரசியலமைப்பின் அடிப்படையில் பிரிக்கப்பட்ட அதிகாரங்களின் படி நிர்வாகம், சட்டமன்றம்/ நாடாளுமன்றம் மற்றும் நீதித்துறை ஆகியவை தனித்தனி அதிகாரங்களைக் கொண்டுள்ளன. இதன் அடிப்படையில் இம்மூன்று துறைகளும் அவரவர் துறைகளில் இயங்கினாலும் அரசியலமைப்பு தான் அனைத்தையும் விட உயர்ந்தது என்பதை ஒருவர் மறந்துவிடக் கூடாது.

ஆளுநர்கள், குடியரசுத் தலைவரின் பங்கு என்ன என்பது குறித்து உச்சநீதிமன்றம் அரசியலமைப்பு சட்ட பிரிவு 142 ஐ பயன்படுத்தி சமீபத்தில் தெளிவுபடுத்தி உள்ளது. அதில் அரசியலமைப்பு அதிகாரம் என்ற பெயரில் எந்தவொரு தனிநபரும் சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை காலவரையின்றி நிறுத்தி வைக்க முடியாது என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி நிறுவியுள்ளது.

இந்த உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்த துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கரின் கருத்துகள் நெறிமுறையற்றவை. இந்தியாவில் "சட்டத்தின் ஆட்சி" தான் நடக்கிறது என்பதை ஒவ்வொரு குடிமகனும் அறிந்திருக்க வேண்டும். என்று குறிப்பிட்டுள்ளார்.