களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தில் ஜெமினி கணேசனுடன் கமல்ஹாசன் 
செய்திகள்

கமல் அப்பவே அப்படித்தான்! -எஸ்.பி.முத்துராமன் பகிரும் ரகசியம்!

களத்தூர் கண்ணம்மா டூ தக் லைஃப் : 66ஆம் ஆண்டில் கமல்ஹாசன்!

Staff Writer

களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான உலக நாயகன் கமல்ஹாசன் இன்று 66ஆவது ஆண்டில் திரையுலகில் காலடி எடுத்து வைக்கிறார்.

ஏ.வி.எம். புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில், பீம்சிங் இயக்கத்தில், ஜெமினி கணேசன், சாவித்ரி நடித்த 'களத்தூர் கண்ணம்மா' படம் இதே (ஆகஸ்ட் 12) நாளில் 65 ஆண்டுகளுக்கு முன்பு 1960ஆம் ஆண்டு வெளிவந்தது. அந்தப் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் கமல்ஹாசன். இதன்மூலம் இன்று 66ஆவது ஆண்டில் திரையுலகில் காலடி எடுத்து வைக்கிறார் கமல்.

இதில் 4 வயதான கமல், 'தென்னகத்து திரைவானுக்கு ஏ.வி.எம். அளிக்கும் குழந்தை நட்சத்திரம்' என்கிற டைட்டில் கார்டுடன் அறிமுகப்படுத்தப்பட்டார். அந்தப் படத்தில் சிறப்பான நடிப்பை கொடுத்ததற்காக அவருக்கு குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருது கிடைத்தது. அவர் எப்படி இந்த படத்தில் நடிக்க வந்தார் என்பது குறித்து அந்திமழை டிவிக்கு இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் அளித்த பேட்டியில், “களத்தூர் கண்ணா திரைப்படத்தில் முதலில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஒப்பந்தம் ஆனவர் டெய்சி ராணி என்ற இந்தி பெண். ஆனால் கமலின் நடிப்பை பார்த்த ஏவி மெய்யப்ப செட்டியார், அந்த பெண்ணுக்கு பதிலாக கமலை நடிக்க வையுங்கள் என்றார்.

இயக்குநர் எஸ்.பி. முத்துராமன்

அவர் எப்படி கமலின் நடிப்பை பார்த்தார் என்றால்...? ஏவிஎம் குடும்ப மருத்துவர் ஒருவர் இருந்தார். அவரிடம் தன்னை ஏவிஎம்மிடம் அழைத்துச் செல்லுங்கள் என கமல் தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருந்திருக்கிறார். அந்த மருத்துவர் அம்மா ஏவிஎம்மின் மனைவியிடம் சொல்லியிருக்கிறார். அவர் ஏவிஎம் சரவணனிடம் சொல்ல, அவர் கமலை அழைத்துக் கொண்டுபோய் ”இந்த பையன் உங்கள் முன்னாடி நடிக்க வேண்டும் என ஆசைப்படுகிறான். மருத்துவர் அம்மா அழைத்து வந்த பையன்” என சொல்லியிருக்கிறார்.

அவர் படிப்பதற்காக லைட் வைத்திருப்பார். அந்த லைட் வெளிச்சம் கமல் மீது படுகின்ற மாதிரி போட்டுவிட்டு, நடி என சொல்லியிருக்கிறார். கமலும் நடித்துக்காட்டி, வசனமும் பேசினார். அவரின் நடிப்பைப் பார்த்து வியந்து பிறகுதான் களத்தூர் கண்ணம்மாவில் கமல்ஹாசனை நடிக்க வைத்தார்.

கமல்ஹாசன் மீது முதன்முதலில் லைட் போட்டவர் ஏ.வி. மெய்யப்ப செட்டியார் தான்.

களத்தூர் கண்ணாம்மாமீவில் பத்து பசங்களுக்கு மேல் நடித்தார்கள். சூட் முடிந்தால் அவர்கள் எல்லோரும் ஆடுவார்கள், பாடுவார்கள். ஆனால் கமல்ஹாசன் மட்டும் காணாமல் போய்விடுவார். தேடிக் கண்டுபிடித்தால், அருகே இருந்த பிரிவியூ தியேட்டருக்கு போய், ஆப்ரேட்டரிடம் படம் பார்ப்பதற்குத் தூக்கி காட்ட சொல்லுவார். கண்ணாடி வழியாக படம் பார்த்துவிட்டு வந்து எங்களிடம் நடித்து காட்டுவார். அப்போது அவனுக்கு 4 வயதுதான். “விளையும் பயிர் முளையிலேயே தெரியும்” அதுதான் இது” என்கிறார் எஸ்.பி. முத்துராமன்.

குழந்தை நட்சத்திரமாக சில படங்கள், பின் இளம் வயதில் சில படங்களில் சிறிய கதாபாத்திரங்கள் என நடித்து அதன்பின் கதாநாயகனாக உயர்ந்து இன்று வரை கதாநாயகனாகவே நடித்து வருகிறார். நடிகராக மட்டுமல்லாமல், தயாரிப்பாளர், இயக்குநர், பாடலாசிரியர், பாடகர் என பல திறமைகளை உள்ளடக்கியவர் கமல்ஹாசன். தமிழில் மட்டுமல்லாது மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி என மற்ற மொழிகளிலும் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர்.

பல புதிய தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகம் செய்தவர். அவருடைய ரசிகர்கள் என்று சொல்லும் அளவிற்கு சினிமாவில் நிறைய பேர் உள்ளனர். தற்போது ராஜ்யசபா எம்.பி. ஆகவும் பதவி வகித்து வருகிறார்.

அவரது 65 வருட திரையுலக பயணத்திற்கு வாழ்த்து தெரிவிக்கும் விதத்தில் அவரை குழந்தை நட்சத்திரமாக 'களத்தூர் கண்ணம்மா' படத்தில் அறிமுகப்படுத்திய ஏவிஎம் நிறுவனம் அப்படத்தின் வீடியோ ஒன்றைப் பதிவிட்டு, “65 வருடங்களுக்கு முன்பு 'களத்தூர் கண்ணம்மா' படம் மூலம் வெள்ளித் திரையில் அறிமுகமாகி மில்லியன் கணக்கானவர்களின் இதயத்தைத் தொட்டவர். நமக்கு உணர்வுகளையும், இசையையும் மற்றும் ஒரு குழந்தை மேதை கமல்ஹாசனையும் அளித்த திரைப்படம். தமிழ்த் திரையுலகத்தில் ஒரு மைல் கல், என்றென்றும் நினைவில் நிற்கும்,” என வாழ்த்தியுள்ளார்கள்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram