செய்திகள்

ஜெயலலிதா சொத்துகள் தமிழ்நாடு அரசிடம் ஒப்படைப்பு!

Staff Writer

கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி முன்னிலையில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான 27 கிலோ தங்க, வைர நகைகள், தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு, பெங்களூரு சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அந்த வழக்கில் தொடர்புடைய தங்கம், வெள்ளி, வைர நகைகள் அடங்கிய 6 டிரங்க் பெட்டிகள், 1,562 ஏக்கர் மதிப்பிலான நில ஆவணங்கள், கர்நாடக அரசு கருவூலத்தில் வைக்கப்பட்டிருந்தன.

வழக்கு முடிந்து போன நிலையில், ஜெயலலிதாவுக்கு சொந்தமான நகைகள், சொத்து ஆவணங்களை தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் ஒப்படைக்கும்படி கர்நாடகா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அவற்றைப் பெற்றுக் கொள்வதற்காக தமிழக லஞ்ச ஒழிப்பு போலீஸ் படையினர், நேற்று கர்நாடகா அரசு கருவூலம் சென்றனர்.

அங்கு நீதிபதி மோகன் முன்னிலையில் ஒவ்வொரு பெட்டியாக திறந்து, நகைகளை எண்ணி, மதிப்பீடு செய்யும் பணி நேற்று துவங்கியது. தமிழக உள்துறை இணை செயலர் ஹனி மேரி, லஞ்ச ஒழிப்பு எஸ்.பி. விமலா ஆகியோர் உடன் இருந்தனர். அந்த வகையில் தங்கம், வைரம், வைடூரியம் என 27 கிலோ நகைகள் மதிப்பீடு செய்யப்பட்டன.

ஜெயலலிதாவிற்கு சொந்தமான 1.2 கிலோ எடை உள்ள தங்க ஒட்டியாணம், ஒரு கிலோ எடையுள்ள தங்க கிரீடம், தங்க வாட்சுகள், தங்க வாள், தங்க கைக்கடிகாரம், 60 கிராம் எடையுள்ள தங்கப்பேனா, ஜெயலலிதா உருவம் பொறிக்கப்பட்ட தங்கத்தட்டு ஆகியன மதிப்பீடு செய்யப்பட்டன.

அனைத்தும் சரி பார்த்து பட்டியல் தயார் செய்த நிலையில், அனைத்து நகைகள் மற்றும் ஆவணங்கள் 6 பெட்டிகளில் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டன. 27 கிலோ தங்க நகைகளுடன் தஞ்சாவூர், திருவாரூர், தூத்துக்குடி, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள ஜெயலலிதாவுக்கு சொந்தமான ரூ.1,526 ஏக்கர் நிலங்கள் ஆவணங்களும் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதன் பிறகு அரசு வழக்கறிஞர் கிரண் ஹாவர்கி கூறுகையில், சசிகலா அபராதமாக ரூ.20 கோடி செலுத்தி உள்ளார். வழக்கு செலவாக ரூ.7 கோடியை தமிழக அரசிடம் கேட்டு உள்ளோம் என்றார்.