கமல்ஹாசன் 
செய்திகள்

எம்.பி. ஆகும் கமல்ஹாசன்… விரைவில் வேட்பு மனுத்தாக்கல்!

Staff Writer

தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள 6 மாநிலங்களவை எம்.பி. பதவிகளில், திமுக சார்பில் ஒரு இடம் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு வழங்கப்பட உள்ளதாகவும் அவர் ஜூன் முதல் வாரத்தில் வேட்புமனு தாக்கல் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் ஜூன் 19ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இதில் திமுக ஆதரவுடன் கமல் எம்பியாக தேர்வாவார் என்று சொல்லப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

திமுக சார்பில் மாநிலங்களவை எம்பிக்களாக வில்சன், சண்முகம், சந்திரசேகரன் மற்றும் அப்துல்லா ஆகியோர் இருக்கின்றனர். இது தவிர மதிமுக சார்பில் வைகோவும், பாமக சார்பில் அன்புமணி ராமதாஸும் எம்பிக்களாக இருக்கின்றனர். இவர்களின் பதவிக்காலம் வரும் ஜூலை 24ஆம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே புதிய எம்பிக்களுக்கான தேர்தல் ஜூன் -19ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்த நிலையில், திமுக ஆதரவுடன் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கிறார். அதேபோல, இந்த தேர்தலில் கமல்ஹாசன் போட்டியிடுவது என்பது இப்போது எடுக்கப்பட்ட முடிவு கிடையாது. கடந்த 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது மநீமவுக்கும் திமுகவுக்கும் இடையே ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது. அதில் கமலுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுப்பது என்று சொல்லப்பட்டிருந்தது. எனவே கமல் போட்டியிட திமுக ஆதரவளிக்க இருக்கிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்.

மக்கள் நீதி மையத்தின் செயற்குழு மற்றும் நிர்வாகிகள் குழு கூட்டம் நாளை அல்லது நாளை மறுநாள் நடைபெற உள்ளதாகவும், கமல்ஹாசன் மாநிலங்களவை உறுப்பினராகப் போட்டியிடுவதற்கு கட்சி நிர்வாகிகள் சார்பில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட இருப்பதாகவும் கூறப்படுகிறது.