சிபிஐ முத்தரசன் - ஆளுநர் ஆர்.என். ரவி 
செய்திகள்

கீழ்வெண்மணி: ஆளுநரின் சர்ச்சை பேச்சுக்கு முத்தரசன் கண்டனம்!

Staff Writer

உலகம் ஒப்புக் கொண்ட வரலாற்று உண்மையை அறியாதவர் ஆளுநர் பொறுப்பில் அமர்த்தப்பட்டுள்ளார் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் விமர்சித்துள்ளார்.

சிதம்பரத்தில் சகஜானந்தரின் பிறந்தநாள் விழாவில் பேசிய ஆளுநர் ஆர்.என். ரவி கீழ்வெண்மணியை நிகழ்வை கொச்சைப்படுத்தும் வகையில் பேசியிருந்தார். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஒன்றுபட்ட தஞ்சாவூர் மாவட்டத்தின் கீழ் தஞ்சை பகுதியில் கீழ் வெண்மணி கிராமத்தில் ஊதிய உயர்வு கேட்டு போராடிய விவசாயத் தொழிலாளர்கள் 44 பேர், சாதி வெறியின் நீசத்தனத்தால் தீ வைத்து கொல்லப்பட்டனர்.

சாதியின் பெயரால் அழித்தொழிக்கப்பட்ட அந்த மக்களின் போராட்ட உணர்வை, வேட்கையை, உறுதியை வெளிப்படுத்தும் வகையில் உழைக்கும் மக்களின் உற்ற தோழர்களால் நினைவுச் சின்னம் எழுப்பப்பட்டுள்ளது.

கற்பூரத்தின் வாசனை அறியாத விலங்கின் உணர்வு கொண்டு மனித வடிவில் வாழ்வோர் வரலாற்று உண்மைகளை அறிந்து கொள்ள முடியாது. இந்த வகையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் காரல் மார்க்ஸ், வெண்மணி தியாகிகள் நினைவு சின்னம், வைக்கம் போராட்டம் குறித்து அறிவுக்கு பொருந்தாத, வெறுப்பையும், சாதிய வெறியினையும் தூண்டி விடும் வன்மம் வடியும் விஷமத்தன கருத்துக்களை இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது." இவ்வாறு முத்தரசன் தெரிவித்துள்ளார்.