சி.டி.ஜோமோன் 
செய்திகள்

பாலியல் பொய்ப் புகார்… நாசமான ஆசிரியர் வாழ்க்கை... மன்னிப்பு என்ன செய்யும்?

Staff Writer

பொய்யான பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியவரும் அவரின் குடும்பமும் என்ன பாடு படும்? எவ்வளவு பெரிய அவமானங்களை, இழப்புகளை சந்திக்க நேரிடும்? இப்படி வீசிப்பட்ட பொய் புகாரால் பாதிக்கப்பட்ட ஆசிரியரின் வழக்கே இது...

கேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள அயம்குடி மதுரவேலி பகுதியைச் சேர்ந்தவர் சி.டி.ஜோமோன் (45). ஆசிரியரான இவர், 2017ஆம் ஆண்டு கோட்டயத்தில் உள்ள குருபனந்தாரா பகுதியில் ஒரு பாராமெடிக்கல் கல்லூரி நடத்தி வந்தார். அந்த நிறுவனத்தில் படித்துவந்த மாணவி ஒருவர், ஜோமோன் மீது குருப்பந்ந்தரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அது என்ன புகார் என்றால், பயிற்சிக்கு அழைத்து சென்றபோது, ஜோமோன் அந்த மாணவியிடம் தவறாக நடந்துகொண்டதாக கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து ஜோமோன் கைது செய்யப்பட்டு சிறையில் அடிக்க, அவரது நிறுவனமும் மூடப்பட்டது.

இதனால், வருமானம் இன்றி தவித்த அவரது குடும்பத்தினர் வேறு வேலைக்கு சென்றதோடு, அவர் மீது தீர வெறுப்புக்கொணடனர்.

இதற்கிடையே, தன் மீதான பொய் வழக்கை எதிர்த்து, சட்டப்போராட்டம் நடத்திய ஜோமோனுக்கு ஜாமின் கிடைத்தது.வெளியே வந்த அவர், தனது குடும்பத்தினரை நேரில் சென்று சந்தித்தார். ஆனால், அவர்களோ இவரை ஏற்றுக் கொள்ள மறுத்து ஒதுக்கினர். ‘இப்படியொரு கொடுஞ்செயலை’ தான் செய்யவில்லை என கூறியும் அவர்கள் நம்ப மறுத்துவிட்டனர். இதனால், நொந்துப்போன அவர் தனிமையில் சுற்றித்திரிந்து, கிடைத்த வேலை செய்து வாழ்ந்து வந்தார்.

புகார் கூறிய அந்த மாணவியோ திருமணமாகி நலமாக வாழ்ந்து வந்தார். இவருக்கு எப்படியோ ஜோமோனின் தற்போதைய நிலை தெரியவந்துள்ளது. இதனால், மனமுடைந்து போன அவர், 7 ஆண்டுகளுக்கு பிறகு தனது கணவருடன் ஜோமோனின் குடும்ப தேவாலயத்து சென்றுள்ளார். திருப்பலிக்கு இடையே, “நான் செய்தது தவறு, சிலரின் தூண்டுதலால் அந்த புகாரை அளித்தேன்” என அவரின் உறவினர்கள் முன்பு மன்னிப்பு கேட்டுள்ளார் அந்த பெண். மேலும், நீதிமன்றத்தில் அளித்திருந்த புகாரையும் திரும்பப்பெற்றுள்ளார். இதனால், நீதிமன்றம் ஜோமோனை விடுவித்தது.

”எவ்வளவு காலம் ஆனாலும் உண்மை வெல்லும் என்ற நம்பிக்கையே என்னை தொடர்ந்து இயங்க வைத்தது.” - இது நீதிமன்ற தீர்ப்புக்கு பின்னர் சி.டி.ஜோமோன் கூறிய வார்த்தைகள்.

இப்படிப்பட்ட ஆசிரியரின் வாழ்க்கையில் விளையாடிட்டீங்களே அம்மணி!