இயக்குநர் பி.எஸ். வினோத் ராஜ் 
செய்திகள்

‘கொட்டுக்காளி’ திரைப்படம்: அமீருக்கு பதிலடி கொடுத்த பி.எஸ்.வினோத் ராஜ்!

Staff Writer

“கொட்டுக்காளி போன்ற திரைப்படங்கள் தியேட்டருக்கு வரக்கூடாது என்று சொல்வது இந்த தெருவுக்குள் நீ வரக்கூடாது என்று சொல்லக்கூடிய மனநிலைக்கு ஒப்பானது. இதை பெரிய மனக்கோளாறாகத்தான் பார்க்கிறேன்.” என்று இயக்குநர் பி.எஸ். வினோத் ராஜ் அமீருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கெவி படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய இயக்குநர் அமீர், "‘கொட்டுக்காளி’ ஒரு ஃபெஸ்டிவல் திரைப்படம். அது வெகுஜன படம் கிடையாது. அதற்காக அது நல்ல படம் இல்லை என்று சொல்லவில்லை. ஒரு திரைப்படவிழா மனநிலைக்காக தயாரிக்கப்பட்ட ஒரு படத்தை, பல சர்வதேச விருதுகளை பெற்ற ஒரு படத்தை, இங்கே கொண்டு வந்து ஒரு வெகுஜன சினிமாவுடன் போட்டிப் போட வைப்பதே ஒரு வன்முறைதான். அது எனக்கு ஏற்புடையதாக இல்லை.

என்னை பொறுத்தவரை இந்த படத்தை நான் தயாரித்திருந்தால், நான் இதை தியேட்டருக்கே கொண்டு வந்திருக்க மாட்டேன். அதை வணிக நோக்கத்தில் கொண்டு வந்து திணிக்க வேண்டிய அவசியம் இல்லை.” என்று அவர் பேசியிருந்தத விவாத்தை கிளப்பியிருந்தது.

இந்த நிலையில், இயக்குநர் பா. ரஞ்சித்தின் பி.கோ.ரோஸி திரைப்பட விழாவில் நேற்று கொட்டுக்காளி திரைப்படம் திரையிடப்பட்டு விவாதம் நடைபெற்றுது. அப்போது, பி.எஸ். வினோத் ராஜ் பேசியதாவது:

“கொட்டுக்காளி எப்போதுமே வெற்றிகரமான படம்தான். படம் வெளிவந்தபோது கலவையான விமர்சனம் வந்தது. மக்களுக்கு பயிற்சி இல்லை என்பதால், கொட்டுக்காளியை புரிந்து கொள்வதில் கொஞ்சம் குழப்பம் இருந்தது.

சினிமா துறையிலிருந்து விமர்சனம் வராது என்று எதிர்பார்த்தேன். ஆனால், விமர்சன அம்பு வந்தது. கொட்டுக்காளி மாதிரி படம் எடுத்தால் யாரெல்லாம் துணையாக இருப்பார்கள் என்று நினைத்தேனோ அவர்கள் துணையாக இல்லை. இந்த மாதிரி படம் தான் தியேட்டருக்கு வரவேண்டும்… இந்த மாதிரி படம் தியேட்டருக்கு வரக்கூடாது என்று சொல்வது இந்த தெருவுக்குள் நீ வரக்கூடாது என்று சொல்லக்கூடிய மனநிலைக்கு ஒப்பானதுதான். இதை பெரிய மனக்கோளாறாகத்தான் பார்க்கிறேன்.

74 வருடமாக நடக்கின்ற பெர்லின் திரைப்பட விழாவில் முதல் முறையாக தமிழ் திரைப்படம் ஒன்று திரையிடப்பட்டது என்றால் அது கொட்டுக்காளிதான். இதைவிட பெருமை என்ன வேண்டும்.” என்றார்.