செய்திகள்

மிரட்டப்படுகிறார்களா ‘ஜனநாயகன்’ விநியோகஸ்தர்கள் ?

Staff Writer

இன்னும் இரு வாரங்களில், அதாவது ஜூலை 23 அன்று ‘ஜனநாயகன்’ ரிலீஸாகவிருக்கிறது என்று சொல்லப்படும் நிலையில், அப்படத்தை வாங்கியிருக்கும் விநியோகஸ்தர்களுக்கு தயாரிப்பு தரப்பு பலவித மிரட்டல்களை வழங்கியிருப்பதாக கோடம்பாக்க ஏரியாவில் கொந்தளிப்பு நிலவி வருகிறது.

தீய சக்திகள் விஜய் கட்சிக்குள் வந்தவுடன் தூய சக்திகள் ஆகிவிடுவதைப் போல, தீய காட்சிகள் பலகொண்டது என்று சொல்லப்பட்ட ஜனநாயகனுக்கு விஜய் முதல்வரானவுடன் சான்றிதழ் வழங்கியிருக்கிறது சென்சார் போர்டு. இதனால் இரு வாரங்களில் படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் கடந்த வாரம் படத்தின் விநியோகஸ்தர்களை ஒட்டுமொத்தமாக சந்தித்த, தமிழக அரசின் சிறப்புப் பிரதிநிதியும் தயாரிப்பாளருமான வெங்கட் நாராயணா சில நிபந்தனைகளை விதித்துள்ளார்.

அதன்படி, படம் தாமதமானதால் ஏற்பட்ட இழப்புகளை தயாரிப்பாளர் போலவே விநியோகஸ்தர்களும் ஏற்றுக்கொள்ளவேண்டும். படம் சமூக வலைதளங்களில் வெளியானதை முன்னிட்டு விலைக் குறைப்பு செய்யப்படாது. காலதாமதமானதால் வட்டி கேட்கக்கூடாது.

மிக முக்கியமாக, விஜய்யின் இமேஜுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் தியேட்டர்களில் அதிக கட்டணம் வசூலிக்கக்கூடாது. ரசிகர் மன்றக் காட்சிகளையும் ஏற்பாடு செய்யக்கூடாது என்று விநியோகஸ்தர்களுக்கு கட்டுபடியாகாத பல கட்டளைகள் விதிக்கப்பட்டுள்ளன.

பெரிய இடம் பகைத்துக்கொள்ளவா முடியும் என்கிற மைண்ட் வாய்ஸுடன் விநியோகஸ்தர்கள் கூட்டத்தை காலி செய்துள்ளனர்.