மதுரை ஆதீனம் கார் விபத்து 
செய்திகள்

கொலை செய்ய சதி... குற்றம் சாட்டிய மதுரை ஆதீனம் - சிசிடிவி காட்சியில் அம்பலம்!

Staff Writer

உளுந்தூர்பேட்டை அருகே நடந்த விபத்தை அடுத்து, தன்னை திட்டமிட்டு கொல்ல சதி நடப்பதாகவும், இதன் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பதாகவும் மதுரை ஆதீனம் குற்றம் சாட்டிய நிலையில், தற்போது சிசிடிவி காட்சியை போலீசார் வெளியிட்டுள்ளனர்.

மதுரை ஆதீனம் கடந்த 2ஆம் தேதி காரில் சென்னைக்கு சென்று கொண்டிருந்தபோது, உளுந்தூர்பேட்டை – சேலம் சாலை ரவுண்டானா அருகே கார் விபத்துக்குள்ளானது. இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் சிசிவிடி பதிவுகளை ஆய்வு செய்ததில், மதுரை ஆதீனத்தின் கார் அஜிஸ் நகர் மேம்பாலத்தில் செல்வதற்குப் பதிலாக அஜிர் நகர் பிரிவு சாலை வழியாக ரவுண்டானா அருகே சென்றபோது விபத்துக்குள்ளானது தெரியவந்தது.

இந்த விபத்தில், மதுரை ஆதீனம் பயணம் செய்த காரின் பின்புறம் சிறிய அளவில் சேதமும் மற்றொரு காரின் முன்புறம் சிறிய அளவிலான சேதமும் மட்டுமே ஏற்பட்டது தெரிய வந்தது.

இதற்கிடையே, தன்னைக் கொலை செய்ய முயற்சி நடந்ததாக மதுரை ஆதீனம் புகார் தெரிவித்திருந்தார், ஆனால், இதை கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் துறையினர் மறுத்துள்ளனர். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், சம்பவம் குறித்து முதல்கட்ட விசாரணையில் கொலை முயற்சிக்கான சதி எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை.

மதுரை ஆதீனம் பயணம் செய்த வாகனத்தின் ஓட்டுநரின் கவனக்குறைவால்தான் இந்த விபத்து ஏற்பட்டது தெரிய வந்துள்ளது. சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்ததில், மதுரை ஆதீனம் பயணம் செய்த வாகனம் அதிவேகமாகச் சென்று விபத்தை ஏற்படுத்தியது தெரிய வந்ததுள்ளது.

மேலும், இது தொடர்பாக மதுரை ஆதீனமோ, அவரைச் சார்ந்தவர்களோ கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் எந்தவிதப் புகாரும் இதுவரை கொடுக்கவில்லை. பொய்யான தகவல்களை சமூக ஊடகத்தில் பகிரும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தற்போது விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகளை காவல் துறையினர் வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.