செய்திகள்

ஊதியத்துடன் மாதவிடாய் விடுமுறை – பிரபல தனியார் நிறுவனம் அறிவிப்பு!

Staff Writer

பிரபல நிறுவனமான எல் அண்ட் டியில் பணியாற்றும் பெண்களுக்கு ஒருநாள் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறை வழங்கப்படும் என்று அந்நிறுவனத்தின் தலைவர் சுப்ரமணியன் அறிவித்துள்ளார்.

நாட்டின் முன்னணி தொழில் நிறுவனம் எல் அண்ட் டி, இன்ஜினியரிங், கட்டுமானம், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் 5000 பெண்கள் உட்பட மொத்தம் 60 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில், மார்ச் 8ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், தனது நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களுக்கு மாதத்தில் ஒருநாள் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறை அளிப்பதாக எல் அண்ட் டி நிறுவனத்தின் தலைவர் சுப்ரமணியன் அறிவித்துள்ளார்.

அண்மையில் உலகின் முன்னணி நாடாக நாம் வளர வேண்டுமெனில் வாரத்திற்கு 90 மணிநேரம் வேலை செய்ய வேண்டும் என்று சுப்ரமணியன் கூறியிருந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த விடுமுறையானது முதற்கட்டமாக இன்ஜினியரிங் மற்றும் கட்டுமான துறைகளில் இருக்கும் பெண்களுக்கு பொருந்தும் என்றும், விரைவில் இது நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.