அமைச்சர் சேகர்பாபு 
செய்திகள்

“அவரு வீணா போனவரு…”- விஜய் குறித்த கேள்விக்கு அமைச்சரின் ரியாக்‌ஷன்!

Staff Writer

தவெக தலைவர் விஜய் குறித்த செய்தியாளர் கேள்வி கேட்டு முடிப்பதற்குள் குறிக்கிட்ட அமைச்சர் சேகர் பாபு, “அவர் ஒரு வீணா போனவரு… வீட்லயே உட்கார்ந்து இருக்காரு” என உதாசினப்படுத்தும் விதமாக பதில் அளித்தார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:

“அதிமுக தன்னை எப்படியெல்லாம் அடிமைப்படுத்திக் கொள்கிறது என்பதற்கு முருகன் மாநாடு ஒரு உதாரணம்.

அண்ணா, பெரியார், ஜெயலலிதா, எம்ஜிஆர் குறித்து பல்வேறு விமர்சனங்களை வைத்தவர் முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை. அடிமை சாசனத்தை பாஜகவிடம் அதிமுக எழுதிவிட்டு மேடையில் அமர்ந்து கொண்டுள்ளனர் முன்னாள் அமைச்சர்கள். நேற்று நடந்த மாநாடு அரசியல் மாநாடு. அது ஒரு நாள் கூத்து, கூடிக் கலைந்த மேகக் கூட்டங்கள் போல் கலைந்த மாநாடு.

பவன் கல்யாணுக்கும் தமிழ்நாட்டிற்கும் என்ன தொடர்பு. பவன் கல்யாண், சென்னையில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று காட்டட்டும் பிறகு அவர் என்ன வேண்டுமானாலும் பேசட்டும் நாங்கள் கேட்கிறோம்.

இதுவரை 117 முருகன் கோயில்களுக்கு குடமுழுக்கு நடந்துள்ளது. மேடை போட்டு மக்களை பிளவுபடுத்துகிறார்கள் பாஜகவினர். பாஜகவில் நைனார் நாகேந்திரன் பலமுடையவரா? அண்ணாமலை பலம் வாய்ந்தவரா என்ற போட்டி நிலவுகிறது.

ஒருவர் பச்சை துண்டை எடுத்து சுற்றிக் கொண்டு இருக்கிறார் அது நயினார் நாகேந்திரன், காவி துண்டை எடுத்து சுற்றிக் கொண்டு இருப்பவர் அண்ணாமலை.

யார் வெற்றி பெறுகிறார்கள் என்று இனி தான் தெரியும். இவர்கள் போட்டிக்காக நடந்த மாநாடு தான் மதுரை முருகர் மாநாடு” என்றவரிடம் தவெக குறித்து கேள்வி எழுப்பப்பட, உடனே குறுக்கிட்ட அவர், “அவர் ஒரு வீணா போனவரு… வீட்லயே உட்கார்ந்து இருக்காரு” என உதாசினப்படுத்தும் விதமாகப் பதில் அளித்தார்.