தன்னை கைது செய்தபோது, தரையில் போட்டு தரதரவென இழுத்ததால், தனக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளதாக மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசனிடம் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை, மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் நேரில் சந்தித்து விசாரணை மேற்கொண்டார். அதன்பின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ”செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதில் மனித உரிமை மீறல் இருந்ததாகவும், அது தொடர்பான புகாரின் அடிப்படையிலும் விசாரணை நடத்த வந்தேன். நான் அவரை சந்தித்த போது சோர்வாக காணப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டது போது, தரையில் போட்டு தரதரவென இழுத்ததாகவும், அதனால் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் செந்தில் பாலாஜி கூறினார்.
அவருக்கு நெஞ்சுவலி இருப்பதால் அவரால் அதிகம் பேச இயலவில்லை என்று கூறினார். அமலாக்கத்துறை கடுமையாக நடந்து கொண்டதாகவும், தன்னை தாக்கி அதிகாரிகளின் பெயரையும் செந்தில் பாலாஜி குறிப்பிட்டுள்ளார்” என்றார்.
விசாரணை எதன் அடிப்படையில் நடத்த வந்தீர்கள் என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் தான் விசாரணை நடத்த வந்தேன். அமைச்சர் மட்டுமல்ல மற்ற நிகழ்வுகளிலும் நேரில் சென்று நாங்கள் விசாரணை நடத்தி உள்ளோம். மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து விசாரணை நடத்த உரிமை உள்ளது’ என்றார்.