அயலகத் தமிழர்களுக்காக புதிய திட்டம் ஒன்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அறிமுகப்படுத்தியுள்ளார்.
சென்னை நத்தம்பாக்கத்தில் நடைபெற்ற அயலகத் தமிழர் தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.
அயலகத் தமிழர் தினவிழாவில் கணியன் பூங்குன்றனார் விருதுகளை முதலமைச்சர் வழங்கினார். இதைத்தொடர்ந்து தமிழர்களின் பெருமையை விளக்கும் வகையில் வீடியோ உடன் பாடல் ஒளிரப்பட்டது.
இதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
உலகின் எந்த பகுதிக்கு போனாலும் தாய்த் தமிழ்நாட்டில் இருக்கும் உணர்வை அயலகத் தமிழர்கள் ஏற்படுத்தினர். அமெரிக்காவில் அயலகத் தமிழர்கள் எனக்கு அளித்த வரவேற்பை நான் என்றைக்கும் மறக்க முடியாது. ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், ஜப்பான் என எங்கு போனாலும் தாய் மண்ணில் உள்ள உணர்வை அயலகத் தமிழர்கள் ஏற்படுத்தினர்.
தமிழ்தான் நம்மை இணைக்கும் தொப்புள்கொடி. தாய் மண் தமிழ்நாட்டின் பொங்கல் விழாவில் உங்களை காணும்போது மகிழ்ச்சி ஏற்படுகிறது. பல்வேறு நாடுகளிலும் உழைப்பால் பாலைகளை சோலைகளாக மாற்றியவர்கள் தமிழர்கள்.
வெளிநாடுகளில் வாழ்ந்தாலும் நீங்கள் தமிழ்நாட்டை மறக்கவில்லை. தமிழ்நாடும் உங்களை மறக்காது.
6 அயலக தமிழ் ஆளுமைகளுக்கு விருதுகளை இன்று வழங்கி சிறப்பித்துள்ளோம். அயலகங்களில் தமிழை வளர்க்கும் பல்வேறு திட்டங்களை திராவிட மாடல் அரசு செயல்படுத்துகிறது.
வேர்களைத் தேடி திட்டம் மூலம் 157 இளைஞர்கள் தாயகம் திரும்பி இருக்கின்றனர். என் ஆட்சியில் உருவான திட்டங்களில் வேர்களைத் தேடி திட்டம் மைல்கல்லாக உள்ளது. திராவிட மாடல் ஆட்சிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி வேர்களைத் தேடி திட்டம். உலகின் எந்த பகுதியில் தமிழர்களுக்கு பிரச்சனை என்றாலும் அரசு தேடி சென்று உதவும்.
இந்த திட்டத்தின் மூலமாக இன்னலுக்கு உள்ளானவர்களின் புன்னகையை மீட்டு தந்திருக்கிறோம். சொல் அல்ல செயல் தான் என்னுடைய ஸ்டைல். 100 ஆசிரியர்கள், தமிழ்க் கலைஞர்களுக்கு பயிற்சியளித்து தமிழர் வாழும் பகுதிகளுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக ரூ.10 கோடியில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அயலகத் தமிழர்களின் அடுத்தடுத்த தலைமுறைக்கு பயிற்றுவிக்க நடவடிக்கை எடுப்போம். பூமியில் எங்கு இருந்தாலும் உங்கள் வேர், மொழி, மண், மக்கள், உறவுகளை மறக்காதீர்கள்” என்று முதல்வர் பேசினார்.