மத்திய அமைச்சர் அமித் ஷா 
செய்திகள்

தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி! – மீண்டும் அமித் ஷா தகவல்

Staff Writer

2026 சட்டமன்றத் தேர்தலில், தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும், அதில் பாஜக அங்கம் வகிக்கும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சிலமாதங்களே உள்ள நிலையில், அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிமுக தலைமையில் பாஜக மீண்டும் கூட்டணி அமைத்தது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமித்ஷா, இது நிர்பந்தத்தினால் உண்டாக்கப்பட்ட கூட்டணி அல்ல. தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டணி தான் செயல்படும் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். அதில், முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு, எடப்பாடி பழனிசாமி பெயரை கூறாமல், அதிமுக தலைமையின் கீழ் நாங்கள் போட்டியிடுவதால், அக்கட்சியை சேர்ந்தவர்களே முதலமைச்சர் ஆவார்கள் என்று கூறியுள்ளார்.

தேர்தல் நெருங்கி உள்ள நிலையில், தமிழகத்தில் பாஜக வளர்ச்சி குறித்து நீங்கள் திருப்தியாக இருக்கிறீர்களா என்ற கேள்விக்கு, என் நம்பிக்கை என்னவென்றாலதேசிய ஜனநாயக கூட்டணி மிக வலுவான நிலையில் இருக்கிறது என்று பதில் அளித்துள்ளார்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய் இணைவாரா என்ற கேள்விக்கு, தேர்தலுக்கு இன்னும் போதுமான நேரம் இருப்பதால், இன்னும் சில காலத்தில் அனைத்தும் தெளிவாகி விடும் என்றார்.

கச்சத்தீவை திரும்ப பெற வேண்டும் என்ற தமிழ்நாட்டின் கோரிக்கை குறித்த கேள்விக்கு, சர்வதேச நடைமுறைகளின் அடிப்படையில் என்ன செய்ய முடியும் என்பதைச் செய்வதுதான் எங்கள் நோக்கம் என்றும் மத்திய அமைச்சர் அமித் ஷா பதில் அளித்துள்ளார்.