நீட் தேர்வு எழுத காத்திருக்கும் மாணவர்கள் (பழைய படம்) 
செய்திகள்

நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு: கட்டுப்பாடுகள் என்னென்ன?

Staff Writer

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வு இன்று தமிழகம் முழுவதும் 31 மாவட்டங்களில் நடைபெறவுள்ளது.

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த நீட் தேர்வை தேசிய தேர்வுகள் முகமை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.

2025-2026ஆம் கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு இன்று மதியம் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை நடைபெறுகிறது. நாடு முழுவதும் நீட் தேர்வை எழுத சுமார் 22 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை 1.5 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி உள்ள 31 மாவட்ட தலைநகரங்களில் நீட் தேர்வு நடக்கிறது.

சென்னையில் மட்டும் 44 மையங்களில் 21,960 பேர் தேர்வு எழுத உள்ளனர். நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி, குஜராத்தி உள்பட 13 மொழிகளில் மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுகிறது. தேர்வு மையங்களில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் என்னென்ன என்பது குறித்து ஹால் டிக்கெட்டிலேயே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி தேர்வு மையத்திற்குள் செல்ல இன்று காலை 11.30 மணி முதல் மாணவ-மாணவிகளுக்கு அனுமதி அளிக்கப்படும். மதியம் 1.30 மணிக்குள் அனைவரும் வந்துவிட வேண்டும். அதன்பிறகு தேர்வு மையத்திற்குள் யாரும் அனுமதிக்கப்படமாட்டார்கள். இதுதவிர தேர்வு மையத்திற்குள் ஹால் டிக்கெட் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையை கட்டாயம் கொண்டுவர வேண்டும். தண்ணீர் பாட்டில்களை பொருத்தவரை உள்ளே இருப்பது வெளியே தெரியும் வகையில் எந்தவிதமான நிறப்பூச்சும் இல்லாத பாட்டில்களை கொண்டு செல்லலாம்.

மேலும், ஹால் டிக்கெட்டில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை முழுமையாக பூர்த்தி செய்து தேர்வு முடிந்ததும் அறை கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும். இல்லை எனில், அந்த மாணவரின் விடைத்தாள் திருத்தப்படாது. தேர்வு அறைக்குள் கைப்பேசி, கைக்கடிகாரம் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் கொண்டு செல்ல அனுமதி இல்லை.

முழுக்கை சட்டை, பெல்ட், கம்மல், மூக்குத்தி ஆகியவை அணியக்கூடாது. தலைமுடியில் ஜடைப்பின்னல் போடக்கூடாது என்பது போன்ற பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. தவறான விடைக்கு நெகட்டிவ் மதிப்பெண் இருப்பதால், தேர்வின்போது மாணவர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும்.

இதுகுறித்த கூடுதல் தகவல்களை https://neet.nta.nic.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் அறிந்துகொள்ளலாம்