காவல் சித்ரவதை மரணங்கள் 
செய்திக் கட்டுரை

முதல்வருக்கு எதிராக செயல்படும் காவல்துறை? பதறவைக்கும் துயரக்கதைகள்

Staff Writer

திருப்புவனம் காவல் விசாரணைக் கொலை ஏற்படுத்தியுள்ள அதிர்வலைகள் இன்னும் அமைதியாகவில்லை. குறிப்பாக, மாநிலத்தில் தொடர்ச்சியாக நிகழ்ந்துவரும் காவல் மரணங்கள் குறித்து மனிதவுரிமை அமைப்புகள் தரப்பில் பெரும் கவலையுடன் கருத்துகள் வெளிப்படுத்தப்படுகின்றன.

கடந்த மார்ச்சில் தலைநகர் சென்னை வட்டாரத்தில் நிகழ்த்தப்பட்ட சூட்டுக்கொலை உட்பட இந்த ஆட்சி வந்தபிறகு, தமிழ்நாட்டில் மொத்தம் 18 சூட்டுக்கொலைகள் பதிவாகியுள்ளன. இவற்றைத் தவிர, காவல்துறை, நீதித்துறை காவலில் வைக்கப்பட்டிருந்தவர்கள் 23 பேர் மரணம் அடைந்ததும் பிரச்னைதான்!

அவற்றையெல்லாம் சேர்த்துதான் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் 24 கொட்டடி மரணங்கள் என நீதிபதிகள் விமர்சனம் செய்தனர்.

இந்த சம்பவங்களில் காவல்துறையின் வசம் விசாரணையில் இருந்தபோது மட்டும் 12 பேர் உயிரை இழந்துள்ளனர். அந்த 'மரணங்கள்' அனைத்துமே சட்டவிரோதமான முறையில் நிகழ்த்தப்பட்டதாகக் குற்றம்சாட்டுகிறார்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள்.

இதில், பரவலாக அறியப்பட்டது, சென்னை ஜி5 காவல் நிலையத்தில் விக்னேஷ் வழக்கு.

”17.4.2022 அன்று சென்னை ஜி5 காவல் நிலையத்தார் இரவு சுமார் 11 மணி அளவில் கெல்லிஸ் சிக்னலில் வாகன சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது ஆட்டோவில் வந்த விக்னேஷ், சுரேஷ் ஆகியோரை விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இரவு முழுவதும் காவல் நிலையத்தில் செய்த சித்திரவதையால் 18.4.2025 அன்று விக்னேஷ் இறந்து போனார். இறந்தவுடன், வயிற்றுப்போக்கு ஏற்பட்டதால் விக்னேஷ் இறந்தார் என ஜி5 காவல் நிலையத்தார் வழக்கு பதிவுசெய்தனர். இந்த வழக்கை நீர்த்துப் போக செய்வதற்காக சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலைய ஆய்வாளராகப் பணியாற்றி வந்த மோகன்தாஸ் காவல் ஆய்வாளர், ஜி5 காவல் நிலையத்திற்கு வருகை தந்து விக்னேஷ் சகோதரர்களிடம் சமரசம்பேசி வழக்கில் சட்டரீதியான தலையீடு செய்யக்கூடாது என உத்தரவாதம் பெற்று ஒரு லட்ச ரூபாய் லஞ்சமாக கொடுத்தார். இந்த சம்பவத்தை அறிந்து காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டு இயக்கம், ஆயிரம் விளக்கு காவல் ஆய்வாளர் மோகன்தாஸ் லஞ்சமாக கொடுத்த ஒரு லட்ச ரூபாய் பணத்தை, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மூலம் விசாரணை அதிகாரியாக இருந்த நீதிமன்ற நடுவரிடம் கொடுத்து வழக்கு பதிவுசெய்யக் கோரியபோது பணத்தை வாங்க மறுத்துவிட்டார். 176(1)(A) குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் நீதிமன்ற நடுவர் விசாரணை நடத்திய போது மேற்படி லஞ்சம் சம்பந்தமாக வாக்குமூலம் பதிவு செய்ய கோரியபோது பணத்தையும் வாக்குமூலத்தையும் வாங்க மறுத்தது எவ்வாறு நியாயமாகும்? ”

அடுத்ததாக, கொடுங்கையூர் காவல் நிலையத்தில் மரணமடைந்த ராஜசேகர் வழக்கு:

”12.6.2022 விசாரணைக்காக கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ராஜசேகர் என்பவர் அன்றே காவல் சித்திரவதையால் மரணம் அடைந்தார். இந்த வழக்கில் சமரசம் செய்வதற்காக ஒரு வழக்கறிஞர் மூலமாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினரும் ஒரு லட்ச ரூபாய் லஞ்சமாக கொடுப்பதாக பேரம் பேசப்பட்டது. லஞ்ச பணம் சம்பவம் குறித்து சென்னை மாநகர காவல் ஆணையர், மாநில மனித உரிமை ஆணையத்திற்கு (SHRC) பாதிக்கப்பட்ட குடும்பத்தின் சார்பில் புகார் கொடுக்கப்பட்டது. ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதற்கு முன் சென்னை மாநகர காவல் ஆணையராக ஜார்ஜ் பணியாற்றியபோது, கண்ணகி நகர் காவல் நிலையத்தில் விசாரணையின் போது மரணம் அடைந்த மீன் குழம்பு கார்த்திக் வழக்கில் சமரசம் செய்வதற்காக காவல் நிலையத்தாரால் லஞ்சமாகக் கொடுக்கப்பட்ட ஒரு லட்ச ரூபாய் பணத்தை காவல் ஆணையர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் ஒப்படைத்தனர். இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் கொடுத்த ஒரு லட்ச ரூபாய் பணம் என்ன ஆனது என்ற விபரம் கூட தெரியவில்லை இதுபோன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.”

சிறுவன் கோகுல் ஸ்ரீ வழக்கு

”1.12023 அன்று செங்கல்பட்டு சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் சிறுவன் கோகுல்ஸ்ரீ என்பவன் இல்லத்திலிருந்த காப்பாளர்களால் அடித்து சித்திரவதை செய்ததில் 96 காயங்கள் ஏற்பட்டு கொலை செய்யப்பட்டான். இந்த வழக்கில் இரண்டு ஆண்டு சட்டப் போராட்டத்திற்கு பின்புதான் SC/ST POA Actகீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மரணம் அடைந்த சிறுவன் கோகுல்ஸ்ரீ அம்மா பிரியா என்பவரை, வழக்கில் சட்டரீதியாக தலையீடு செய்யக்கூடாது என தடுக்கும் நோக்கத்தில், கடத்திய செங்கல்பட்டு கூர்நோக்கு இல்லப் பணியாளர்கள், கொலை மிரட்டல் விடுத்த காஞ்சிபுரம் மாவட்ட முன்னாள் குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் சிவக்குமார் மற்றும் கூர்நோக்கு இல்லத்தின் முன்னான் மேலாளர் ஜெயராஜ் ஆகியோர் மீது, செங்கல்பட்டு நகர் காவல் நிலையம், துணை காவல் கண்காணிப்பாளர் (DSP) காவல் கண்காணிப்பாளர் (SP) காவல்துறை இயக்குனர் (DGP) ஆகியோருக்கு புகார் கொடுத்து இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையிலும் இன்றுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. பாதிக்கப்பட்டவர் நேரடியாக தேசிய குழந்தைகள் நல ஆணையத்திடமும் (NCPCR) மாநில மனித உரிமைகள் ஆணையத்திடமும் (SHRC) முறையிட்டும் நடவடிக்கை இல்லை. ஆனால் பாதிப்பை ஏற்படுத்தியவர்கள் இடம் மாறுதல் பெற்று பாதுகாப்பாக தங்களுடைய வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள்.

சிறுவன் கோகுல்ஸ்ரீ மரணத்திற்குப்பின், சமூக பாதுகாப்புத் துறையின் இயக்குனர் வளர்மதி ஐஏஎஸ், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை இணை இயக்குனர் தனசேகர் பாண்டியன் ஆகியோர் நேரடியாக சம்பவ இடத்திற்கு வந்து பாதிக்கப்பட்டவர்களை, பாதிப்பு ஏற்படுத்தியவர்களை, சம்பவ சாட்சிகளை நேரடியாக விசாரணை செய்தார்கள். ஆனால் விசாரணை அறிக்கை என்ன ஆனது என்ற விவரம் இன்றுவரை வெளியிடப்படவில்லை. அதிகார சக்தி படைத்தவர்கள் பாதிப்பை ஏற்படுத்தியவர்களை பாதுகாக்கக் காட்டிய அக்கறை பாதிக்கப்பட்டவருக்கு ஆதரவாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இன்றுவரை அரசு பணியில் மிக சௌகரியமாக பாதுகாப்போடு பணியாற்றி வருகிறார்கள்.

சிறுவன் கோகுல்ஸ்ரீ மரணத்தைத் தொடர்ந்து 6-2-2023 அன்று தமிழக முதல்வர் உத்தரவின்படி, இளைஞர் நீதி அமைப்பின் கீழ் செயல்பட்டுவரும் கூர்நோக்கு இல்லங்கள் சிறப்பு இல்லங்கள் மற்றும் பாதுகாப்பு இல்லங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகள் மற்றும் நிர்வாக திறன்களை மேம்படுத்தும் பொருட்டு சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஒரு நபர் கமிஷன் அமைக்கப்பட்டது. நீதிபதி கே.சந்துரு தலைமையிலான ஒரு நபர் சுமிஷன் தமிழ்நாடு முழுவதும் ஆய்வு செய்து தனது அறிக்கையை 16.11.2023 அன்று தமிழக முதல்வரிடம் சமர்ப்பித்தது. ஆனால் அறிக்கை இன்றுவரை தமிழ்நாடு அரசு வெளியிடவில்லை. பரிந்துரை குறித்தான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. சந்துரு ஆணையின் பரிந்துரைகளின்படி அரசு எடுத்த நடவடிக்கை சார்ந்த தகவல்கள் கொண்ட அறிக்கை வெளியிடப்படுமா?” என்பது மனிதவுரிமை ஆர்வலர்களின் கேள்வி.

2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மட்டும் நடந்த 4 காவல் நிலைய மரணங்கள்:

”1. மதுரை, அரசு ராஜாஜி தலைமை மருத்துவமனையில் தெருவோரக்கடை வைத்து பிழைத்துக் கொண்டிருந்தவர் மணிமேகலை. அவரின் கணவர் கணேசன். ஒரு கட்டத்தில் கடைகள் அங்கிருந்து அகற்றப்படவே தற்போது கூலி வேலை செய்து வருகிறார்கள். இவர்களது ஒரே மகன் கார்த்தி (32) இவருக்கு திருமணம் ஆகி ஒரு வயதிலும், மூன்று வயதிலும் குழந்தைகள் இருக்கின்றன. இவர்மீது சில வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் நாள் ஒரு வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரணைக்குப் பின் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அடுத்தநாள் காலையிலேயே மரணம் அடைந்தார். தற்போது கணவனை இழந்து மனைவியும் குழந்தைகளும் நீதிக்காகக் காத்திருக்கிறார்கள்.

2. கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டு 11 மாத சிறைக்குப்பின் பிணையில் வெளியே வந்தவர் ஸ்ரீபெரும்புதூர் அருகாமையில் உள்ள கட்சிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கவுன்சிலர் சாந்தகுமார் (30) இவருக்கு திருமணமாகி இரண்டு குழத்தைகள் உள்ளன. 2024ஆம் ஆண்டு ஏப்ரல் 13ஆம் தேதி விசாரணைக்காக சாந்தகுமார் மற்றும் அவரோடு வழக்கில் உள்ள அனைவரையும், செவ்வாப்பேட்டை காவல் நிலையத்திற்கு காலையில் அழைத்துச் சென்றனர் விசாரணையின்போது போலீசார் தடத்திய சித்ரவதையில் அன்று மாலை சுமார் 4.00 மணியளவில் காவல் நிலையத்தில் இறந்து போனார். இந்த வழக்கில், சாந்தகுமாரை செவ்வாப்பேட்டை காவல் நிலைய போலீசார் நெஞ்சில் மிதித்து சித்ரவதை செய்ததை நேரில் பார்த்த சாட்சிகள் உள்ளனர். மேலும் உடற்கூராய்வு அறிக்கையில் காயங்கள் உறுதி செய்யப்பட்ட நிலையில், இறந்தவரின் மனைவி காவல்துறையினரால் மறைமுகமாக மிரட்டப்பட்டு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரவிடாமல் தடுத்துள்ளனர்.

3. 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் தேதி அன்று விழுப்புரம் தாலுகா காவல் நிலைய எல்லையில் இருந்த டாஸ்மாக் கடைக்கு அருகில் உள்ள உணவகத்தில் வேலை பார்த்து வந்தார் விழுப்புரம் ஜிஆர்பி தெருவைச் சேர்ந்த ராஜா (44). மது விற்பனைக்கான நேரம் முடிந்த நிலையில், மது விற்பனை செய்ததால் விசாரணைக்காக விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்திற்கு ராஜா அழைத்துச் செல்லப்பட்டார். காவல் நிலையத்தில் நடந்த சித்ரவதையால் சுமார் 4 மணி நேரத்திலே நெஞ்சுவலி ஏற்பட்டு மரணம் அடைந்தார்.

இதன் பின்னர் எழுதப் படிக்கத் தெரியாத ராஜாவின் மனைவி அஞ்சு என்பவரிடம், விழுப்புரம் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர், தாலுகா காவல் நிலைய போலீசாரைக் காப்பாற்றுவதற்காக, உள்ளூர் கட்டப்பஞ்சாயத்து ஆட்களை வைத்து பணம் தருவதாக ஆசைவார்த்தை கூறி, மிரட்டி, கையொப்பம் பெற்று, முதல் தகவல் அறிக்கையில் (FIR) பொய்யான தகவலை எழுதி போலீசார் பதிவு செய்தனர். உயர் நீதிமன்றத் தலையீட்டில் விசாரணையின் போது போலீசார் செய்த சட்டவிரோத தவறுகளை அறிந்த நீதிபதி இரண்டாவது முறை உடற்கூராய்வு செய்ய உத்தரவிட்டார்.

பின்னர் ராஜாவின் உடல் புதைக்கப்பட்ட 38 நாட்களுக்கு பின்பு மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டு மறு உடற்கூராய்வு செய்யப்பட்டது. ராஜாவின் உடற்கூராய்வில் ஒரு மருத்துவர் மட்டுமே ஈடுபட்டார். தேசிய மனித உரிமை ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி உடற்கூராய்வு செய்யப்படவில்லை. மருத்துவத்துறை,மாவட்ட காவல்துறை சட்டப்படி செயல்படாததால் முதல் உடற்கூராய்வில் முடிவில் காயத்தைக் கண்டறிய முடியவில்லை. இதனால் உயர்நீதிமன்ற உத்தரவின் கீழ் இரண்டாவது முறை நடந்த உடற்கூராய்வில் இரண்டு மருத்துவர்கள் பங்கேற்றார்கள். ஆனால் ராஜாவின் உடல் 80% சிதைந்து விட்டது (decompose). இதனால் உடலில் உள்ள காயத்தைக் கண்டறிவது என்பது மிகுந்த சவாலாக இருந்தது.

4. விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்த ஜெயக்குமார் (60) ஒரு வழக்கில் விசாரணைக்குப்பின் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் ஏப்ரல் 15ஆம் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் இறந்தார்.” என பாதிப்புகளை விவரித்துள்ளது, காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டியக்கம்.

மேற்கண்ட மூன்று வழக்குகளில் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 176 (1)(A) வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் ராஜா வழக்கில் உயர் நீதிமன்றத்திற்குச் சென்று முறையீடு செய்த பின்புதான் இதே பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வரின் உறுதிமொழிக்கு எதிராகச் செயல்படுகிறார்களா காவல்துறையில்?

”2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் 6ம் தேதியன்று கொடுங்கையூர் காவல் நிலையத்தில் ராஜசேகர் என்பவர் காவல் சித்திரவதையால் மரணம் அடைந்த நிலையில், ’இனிமேல் தமிழ்நாட்டில் காவல் நிலையங்களில் மரணமே நடக்காது’ என உத்தரவாதம் கொடுத்தார், காவல்துறை அமைச்சரான முதலமைச்சர் ஸ்டாலின்.

அந்த ஆண்டு ஜூலையில் தமிழ்நாடு காவல்துறைக்கு குடியரசுத் தலைவரின் கொடி வழங்கும் விழாவில், காவல் நிலைய மரணங்கள் இல்லை என்ற நிலையை தமிழ்நாடு காவல்துறை ஏற்படுத்த வேண்டும் என்று பேசினார்.

ஆனால் முதலமைச்சரின் உத்தரவாதத்திற்குப் பின்னர் மட்டும் 16 காவல் நிலைய மரணங்கள் நடந்துள்ளன; இதன்மூலம் முதலமைச்சரின் உத்தாவாதத்தை தமிழ்நாடு காவல்துறை செயல்படுத்தவில்லை; காவல்துறையின் தொடர் மனித உரிமை மீறலைக் கட்டுப்படுத்தவில்லை.” என கவலையுடன் விமர்சிக்கிறார்கள், காவல் சித்ரவதைக்கு எதிரான மனிதவுரிமைச் செயற்பாட்டாளர்கள்.