கோப்பகப் படம்
செய்திக் கட்டுரை

பெயில் ஆன 5,000 தனியார் பள்ளி மாணவர்கள்... என்ன ஆச்சு?

இரா. தமிழ்க்கனல்

தனியார் பள்ளிகளில் படித்த மாணவர்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் இந்த ஆண்டு தேர்ச்சி அடையவில்லை!

பொதுவாக அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் தேர்ச்சி அளவு குறைவாக இருக்கும். பல இடங்களில் மோசமாகவும் இருக்கும். ஆசிரியர் பற்றாக்குறை உட்பட பல பிரச்னைகள் இதற்கான காரணங்களாகச் சொல்லப்படுகின்றன.

இதனாலேயே அரசுப் பள்ளிகளைவிட தனியார் பள்ளிகளில் மாணவர்களைச் சேர்ப்பது அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது. இன்னொரு புறம், தனியார் பள்ளிகளின் எண்ணிக்கையும் பெருகி வருகின்றன.

இந்த நிலையில், இன்று வெளியிடப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவில், 5,138 மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர்.

அரசுத் தரப்பில் மொத்தம் 6 ஆயிரத்து 247 பள்ளிகளில் 1,867 பள்ளிகளில் அனைவரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். தேர்வு எழுதிய 1,95,113 மாணவன்களில் 1,72,356 பேரும் 2,12,306 மாணவிகளில் 1,99,471 பேரும் தேர்ச்சி அடைந்தனர்.

மாணவன்களில் 88.34 சதவீதமும், மாணவிகளில் 93.95 சதவீதமும் மொத்தம் 91.26 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மொத்தமுள்ள 1,808 அரசு உதவிபெறும் பள்ளிகளில் 459 பள்ளிகளில் 100 சதவீதத் தேர்ச்சி கிடைத்துள்ளது. உதவிபெறும் பள்ளிகளில் மாணவிகளைவிட மாணவன்கள் குறைவாகவே தேர்வை எழுதினர்.

தேர்வு எழுதிய 98,760 மாணவன்களில் 89,315 பேரும், 1,09,238 மாணவிகளில் 1,05,435 பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்தப் பள்ளிகளில் 4,07,419 மாணவர்களில் 3,71,827 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

முழுவதும் தனியாரால் நடத்தப்படும் பள்ளிகளில் தமிழ்நாட்டுப் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் 4,430 பள்ளிகள் இயங்குகின்றன. இவற்றில் 2,591 பள்ளிகளில் 100 சதவீதத் தேர்ச்சி வந்துள்ளது.

இந்தப் பள்ளிகளில் படித்து தேர்வு எழுதிய 1,42,247 மாணவன்களில் 1,38,407 பேரும், 1,13,575 மாணவிகளில் 1,12,277 பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

மொத்தம் 2,55,822 மாணவர்களில் 2,50,684 பேர் தேர்ச்சி பெற்றனர்.

அவர்களில், 5 ஆயிரத்து 138 பேர் தோல்வி அடைந்துள்ளனர்.

கடந்த ஆண்டை ஒப்பிட இந்த ஆண்டில் மொத்தத்தில் கூடுதலான தேர்ச்சி சதவீதம் இருந்தாலும், கட்டணப் பள்ளிகளில் குறைந்த அளவுதான் முன்னேற்றம் இருக்கிறது.

தேர்ச்சிவீதத்தைப் பொறுத்தவரை கடந்த ஆண்டில் அரசுப் பள்ளிகள் 87.9%, அரசின் உதவிபெறும் பள்ளிகள் 91.77%, தனியார் பள்ளிகள் 97.43% என இருந்தது.

இந்த ஆண்டில் அரசுப் பள்ளிகள் 3.36% அளவுக்கும், உதவிபெறும் பள்ளிகள் 1.86% அளவுக்கும், தனியார் பள்ளிகள் 0.56% அளவுக்கும் தேர்ச்சியைக் கூட்டியுள்ளன.

குறிப்பாக, உயர்தரமாகக் கூறப்படும் தனியார் பள்ளிகளில் தேர்வுத் தோல்வியைக் குறைப்பதில் இந்த ஆண்டு முன்னேற்றம் குறைவு என்பது கவனம் செலுத்தவேண்டிய புள்ளி!

போதுமான ஆசிரியர்கள், கட்டமைப்பு வசதிகள், உயர்ந்த தரம், தனித்தன்மையான வசதிகள் எனப் பலவாறாக விளம்பரம் செய்து, அதிக கட்டணமும் வசூலிக்கும் பள்ளிகள், தனியார் பள்ளிகள். ஆனால், மாணவர்களைத் தேர்வில் தேர்ச்சிபெறச் செய்யக்கூட அவர்களுக்கு திறன் இல்லையா என்பது மில்லியன் டாலர்... இல்லையில்லை கோடானகோடி டாலர் கேள்வி!

இதே பள்ளிகளில்தான் மிக மிக அதிகமாக மதிப்பெண்களை அள்ளிக் குவிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்தும் வருகிறது. ஏனென்றால், நட்சத்திரப் பெயர் பெற்ற தனியார் பள்ளிகளில் மாணவர்களை முந்தைய வகுப்பு மதிப்பெண்கள், தேர்வு முடிவுகளை வைத்து வடிகட்டி வடிகட்டிதான் பொதுத் தேர்வுக்கு அனுப்புகிறார்கள்.

எத்தனையோ பள்ளிகளில் குறைந்த மதிப்பெண் எடுக்கும் மாணவர்களின் பெற்றோரை அழைத்து, டிசி வாங்கிச்சொல்லும் சம்பவங்களும் செய்திகளாக வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், வேறு பல மாற்றுத் திறன்கள் இருந்து- மதிப்பெண் மட்டும் எடுக்கமுடியாமல் இருக்கும் சாதனையை வெளிக்காட்டத் தயாராக உள்ளவர்கள், மெல்லக் கற்போர் போன்ற வகை மாணவர்களுக்கு, தேவையான அளவு உரிய கவனம் தரப்படுகிறதா என்பதும் இன்னொரு முக்கியமான கேள்வி!

அரசு, உதவிபெறும் பள்ளிகளைப் பொறுத்தவரை வடிகட்டல் முறைகள் என எதுவும் இல்லை. மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான குறிப்பான அறிவுறுத்தல்களை மாநில அளவில் பள்ளிக் கல்வித் துறை அவ்வப்போது வழங்கியபடி இருக்கிறது என்பது தெரிந்ததே!

பிரின்ஸ் கஜேந்திரபாபு, கல்வியாளர்

இந்த சூழலில் இப்பிரச்னை குறித்து கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபுவிடம் பேசினோம். தனக்கே உரிய கண்ணோட்டத்துடன் அவர் கருத்துகளை முன்வைத்தார்.

“முதலில் அரசுப் பள்ளியிலும் 100% தேர்ச்சி அடைந்தாக வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடில்லை; அது சந்தையின் தேவை; கல்வியியல் கண்ணோட்டம் அல்ல. ஆனாலும் 100 சதவீதத் தேர்ச்சி என விளம்பரப்படுத்தும்- மாணவர்களை வடிகட்டி சேர்க்கின்ற தனியார் தரப்பில் இப்படியொரு முடிவு வந்திருப்பதைப் பற்றிக் கேட்பதால் சொல்கிறேன். மாணவர்களைப் பற்றிய மதிப்பீட்டை முன்னரே எடுத்திருப்பார்கள். குறிப்பிட்ட மாணவருக்கு பாடத்தின் மீது எப்போதிருந்து அக்கறையின்மை என்பதைப் பார்க்கவேண்டும். ஏனென்றால், கல்வி உரிமைச் சட்டத்தின்படி 1-8 வரை படித்த மாணவர்கள் சேர்ந்திருக்கலாம். 9,10இல் அவர்களுக்கு உரிய கவனம் தேவைப்பட்டிருந்தால் செலுத்தியிருக்கிறார்களா? ஒருவேளை கட்டாயத்தால் அவர்களைச் சேர்த்ததால் அக்கறையில்லாமல் விட்டுவிட்டார்களா? இந்த ஐந்தாயிரம் பேரில் முற்பட்ட சாதியினர், பின்தங்கிய சாதியினர் எத்தனை பேர்? இப்படி பல விசயங்களையும் முழுமையாக ஆய்வுசெய்ய வேண்டும். இதேசமயம், தனியார் பள்ளிகள் கவனம் செலுத்தவில்லை என நான் சொல்லவரவில்லை.” என அழுத்தமாகச் சொன்னார், கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு.