அரி பரந்தாமன், ஓய்வுபெற்ற நீதிபதி 
செய்திக் கட்டுரை

போராட்டத்துக்கு வித்திட்ட நீதிபதி சாமிநாதன் விவகாரம் - 8 முன்னாள் நீதிபதிகள் கடிதம்!

Staff Writer

உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதனின் நடவடிக்கைக்கு எதிராக ஓய்வுபெற்ற நீதிபதிகள் எட்டு பேர் கடிதம் வெளியிட்டுள்ளனர். 

மனித உரிமை பாதுகாப்பு மையம் எனும் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டு வருகிறார், உயர்நீதிமன்ற வழக்குரைஞர் வாஞ்சிநாதன். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு போன்ற கொடிய அரச வன்முறைகள், காவல்துறை அத்துமீறல்கள், மனிதவுரிமை மீறல்கள், அனைத்து சாதியினர் அர்ச்சகர் போன்ற விவகாரங்களில் நீதிபெறச் செயல்பட்டு வருபவர்.

இவர், அண்மையில் உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன் மீது உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு புகார் அனுப்பியிருந்தார்.

இந்த நிலையில், நேற்று திடீரென வேறொரு வழக்கில் விசாரணை நடத்திக்கொண்டிருந்த ஜி.ஆர்.சாமிநாதன், திடீரென வாஞ்சிநாதனுக்கு நீதிமன்ற அவமதிப்பு என நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

அதன்படி, வாஞ்சிநாதன் அவரின் நீதிமன்ற அரங்கில் பிற்பகலில் போய் முன்னிலையானார். அப்போது, தன்னை சாதியமதரீதியாகச் செயல்படுவதாகக் கூறியுள்ளதாகவும் இந்த நீதிமன்ற அவமதிப்புக்காக வரும் திங்களன்று விசாரணைக்கு வருமாறும் சாமிநாதன் உத்தரவிட்டார்.

அப்போது, வழக்குரைஞரை நீதிபதி கோழை எனக் குறிப்பிட்டதாக பிரச்னை எழுந்துள்ளது.

இந்த விவகாரத்தில் சாமிநாதன் அரசமைப்பு வரம்பை மீறிச் செயல்படுகிறார் என உரிமை அமைப்புகளும் தமிழ்நாடு பார் கவுன்சில் நிர்வாகிகளும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மதுரையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ஓய்வுபெற்ற நீதிபதி அரிபரந்தாமன், சாமிநாதனின் நடத்தை அரசமைப்புக்குவிரோதம் என்றும் தன் உத்தரவை அவரே திரும்பப்பெற வேண்டும் என்றும் அல்லது தலைமைநீதிபதி இதில் தலையிட்டு வழக்குரைஞர் மீதான நீதிமன்ற அவமதிப்பைக் கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இதை ஆதரித்து தான் உட்பட 10 நீதிபதிகள் வேண்டுகோள் விடுப்பதாகவும் தெரிவித்தார். தனிப்பட்ட முறையில் தனக்கு சாமிநாதன் நண்பர்தான் என்றும் விமர்சனம் அவரைப் பற்றி தனிப்பட்டு அல்ல, அவரின் செயல்பாடு பற்றியதுதான் என்றும் அரி குறிப்பிட்டார்.

அதைத் தொடர்ந்து, ஓய்வுபெற்ற நீதிபதிகள் சந்துரு, அரி பரந்தாமன், அக்பர் அலி, விமலா, சுந்தர், செல்வம், கலையரசன், சசிதரன் ஆகிய 8 பேர் சாமிநாதனுக்கு பகிரங்கக் கடிதம் ஒன்றை வேண்டுகோளாக முன்வைத்துள்ளனர்.

இத்துடன், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தி.க. தலைவர் வீரமணி, தமிழ்நாடு புதுவை பார்கவுன்சில் நிர்வாகிகள், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், த.பெ.தி.க. பொதுச்செயலாளர் கோவை இராமகிருஷ்ணன் உட்பட பல தலைவர்களும் அமைப்பினரும் சாமிநாதனின் உத்தரவு அரசமைப்புவிரோதம் என்று கண்டனமும் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு, புதுவை வழக்குரைஞர்கள் கூட்டமைப்பு சார்பில் திங்கள் காலையில் அனைத்து நீதிமன்றங்களிலும் வாயில் போராட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.