செய்திக் கட்டுரை

எடப்பாடி வைத்த செக் - கூட்டணியில் ஓ.பன்னீர், தினகரன் குரல் மாற்றம்!

Staff Writer

அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் திடீர் மாற்றத்துக்குப் பின்னணியில் நடந்தது என்ன என்பது பற்றி பரபரப்பான தகவல்கள் வந்துள்ளன.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் முன்னிலைக் கட்சிகளாக இருக்கும் அ.தி.மு.க., பா.ஜ.க. தலைவர்களான எடப்பாடி பழனிசாமியும் பியூஷ் கோயலும் சென்னையில் சந்தித்ததில் முக்கிய முடிவு எட்டப்பட்டுள்ளன. ஆனால் இதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதுதான் இன்னும் புதிரான கேள்வியாக நீடிக்கிறது.

இரு தலைவர்களுக்கும் இடையிலான ஒன்றரை மணி நேரச் சந்திப்பில், முக்கியமாக தொகுதிகள் குறித்து பேசப்பட்டுள்ளது. பழனிசாமியைப் பொறுத்தவரை 160- 170 தொகுதிகள் தங்களுக்குத்தான் என உறுதியாகப் பேசியுள்ளார்.

பா.ஜ.க. தரப்பில் 60 தொகுதிகள் எனக் கடைசியாகக் கேட்கப்பட்டுள்ளது. அதற்குள் மற்ற பா.ம.க., தே.மு.தி.க., அ.ம.மு.க., ஓ.பன்னீர் தரப்புக்கு பிரித்துக் கொடுத்து விடவேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனில், பன்னீர், தினகரன் இருவரையும் அ.தி.மு.க. கூட்டணியில் இணைப்பதில் எந்தத் தடையும் இல்லை என்பது புரிந்துகொள்ளக் கூடியதே!

ஆனால் சிக்கலே அதுதான், இப்போது!

நேற்றுவரை பன்னீர்செல்வமும் தினகரனும் நிச்சயம் அ.தி.மு.க.+பா.ஜ.க. கூட்டணிக்கு வருவார்கள்; அதற்காக எடப்பாடி பழனிசாமியிடம்தான் பேச வேண்டியிருக்கிறது எனும் நிலைமை. இன்றோ நேர் எதிராக காட்சிகள் மாறிவிட்டன.

அ.தி.மு.க. தொண்டர்களை ஒன்றிணையவிடாமல் தடுக்கும் பழனிசாமிக்கு பாடம் புகட்ட வேண்டும் என சாபம் விடாத குறையாகப் பேசியிருக்கிறார், பன்னீர்.

”என்னப்பா, எங்களுக்கு ஆறு இடங்கள்தானா... இப்படியான தகவல் தவறு... முதலில் கூட்டணியே யாருடன் என்று இன்னும் நாங்கள் முடிவுசெய்யவில்லை” என்கிறார் தினகரன்.

எத்தனை இடங்கள் வாங்கினாலும் அதில் சரிபாதியிலாவது பா.ஜ.க. போட்டியிடும் என்பது எதிர்பார்க்கப்படும் நிலவரம். மீதத்தில்தான் பிரித்துக் கொடுக்க முடியும் என்றால், சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக இருந்த தே.மு.தி.க., ஒரு காலத்தில் மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியைத் தாங்கிநின்ற பா.ம.க. ஆகிய கட்சிகளுக்கு கணிசமான இடங்களைத் தந்தே ஆகவேண்டும். அவற்றுக்கு அடுத்ததாகத்தான் அ.தி.மு.க. முன்னாள் தலைகளுக்கு ஐந்தோ ஆறோதான் தரமுடியும் என்பது யதார்த்தம்.

ஆனால், சில பத்து இடங்களை எதிர்பார்த்து கணக்குப்போட்ட தினகரனின் அ.ம.மு.க.வோ, கட்சியில் மீண்டும் இணைத்துக்கொண்டு கணிசமாகத் தன் ஆதரவாளர்களுக்கு இடங்கள் தருவார்கள் என எதிர்பார்த்த பன்னீர் தரப்போ இதனால் கடும் கோபம் அடைந்தது.

இப்படியொரு நிலையைத்தான் பழனிசாமி தரப்பு எதிர்பார்த்தது.

அவர்கள் இருவரும் வராவிட்டால் நல்லதுதான் என்பது அவருடைய கணக்கு. பா.ஜ.க.வின் அழுத்தத்தால்தான் அதற்கு கடைசி நேரம்வரை இழுத்தடித்து ஒத்துக்கொண்டார் பழனிசாமி.

இப்போது இரு தரப்பும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் வராமல் போனதற்கு, தான் காரணமில்லை என பா.ஜ.க.வுக்கு காட்ட விரும்புகிறது, அ.தி.மு.க. தலைமை.

கடந்த தேர்தலில் பன்னீரைத் தன்வசம் வைத்துக்கொண்ட பா.ஜ.க., பழனிசாமியை இப்போது உடன் வைத்துக்கொண்டு பன்னீரைக் கழற்றிவிடுமா? சில மாதங்களாகவே பா.ஜ.க. அணிக்கு மாறாக புது கூட்டணி குறித்துப் பேசிவந்த தினகரன் அதேகுரலை எதிரொலிக்கிறார்; அவரின் நிலை அப்படியே தொடருமா?

விரைவில் சாயம் வெளுத்துவிடும்!