‘சென்னை புத்தகக் காட்சி நெருங்கிறது இன்னும் பஞ்சாயத்து ஆரம்பிக்கவில்லையே…’ என நினைத்தவர்களுக்கு, கண்டென்ட் கொடுத்திருக்கிறார் எழுத்தாளர் தேனி விசாகன்.
அதாவது, ”சீர் வாசகர் வட்டம், மற்றும் மின்னங்காடி ஆகிய இரண்டு பதிப்பக உரிமையாளர்களுக்கு என்னுடைய கடுமையான கண்டனத்தோடு இந்தக் கடிதத்தைத் தொடங்குகிறேன்.
இந்த இரண்டு நிறுவனங்களோடு, மேலும் சில பதிப்பகங்கள் மக்கள் பதிப்பு என்கின்ற பெயரில் மலிவு விலையில் நூல்கள் கொண்டுவருவதில் ஏற்படுகின்ற சிக்கல்கள், பாதிப்புகள் குறித்து எந்தவித கவலையுமின்றி எடுத்தேன் கவிழ்த்தேன் என்று இயங்கிவருவது ஏற்புடையது அல்ல.
300 பக்கங்கள், 400 பக்கங்கள், கெட்டி அட்டை என அறிவித்துவிட்டு அதற்கான விலையை வெறும் 100 ரூபாய் என நிர்ணயித்து விற்பனை செய்வதால் பிற பதிப்பகங்களுக்கு நெருக்கடி தருகின்ற விதமாக அது அமையாதா என்று அவர்கள் சித்திக்க வேண்டாமா? அவர்கள் பிறரிடமிருந்து திரள்நிதி வசூலித்து இவ்வாறான நாவல்களை, பிற படைப்புகளைப் பதிப்பித்தார்களெனில், இலவசமாகத்தானே மக்களுக்குத் தர வேண்டும்? இலவசமாகக் கொடுக்கின்ற பட்சத்தில் ஆட்சேபனை ஏதும் எழ வாய்ப்பில்லைதானே? அதைவிடுத்து, தேவையானதற்கும் மேலாக நிதியை வசூலித்துக்கொண்டு, புத்தகத்திற்கான விலையையும் நிர்ணயிப்பது நியாயமற்ற செயல் இல்லையா?
400 பக்கங்கள் அளவு, கெட்டி அட்டை இவற்றிற்கான குறைந்தபட்ச உற்பத்திச் செலவு எவ்வளவு ஆகும் என்பது பதிப்பகங்களுக்குத் தெரியாதா? உற்பத்திச் செலவை விட மூன்று மடங்கு குறைவாக விலை நிர்ணித்தால் பிற பதிப்பகங்களின் நிலை என்னாவது? இதுதவிர, வாசகர்களுக்குக் குழப்பம் ஏற்படாதா? 700 பக்கங்கள் கெட்டி அட்டை என ஒரு நூலுக்கு பிஓடியில் குறைந்தபட்ச உற்பத்திச் செலவு 450 ஆகிறது என்றால், ஏஜென்ட் கமிசன், பேக்கிங் அன்டு ஃபார்வேர்டிங், பதிப்பகத்திற்கான லாபம் என அந்த நூலுக்கு 1000 மாவது நிர்ணயிக்க வேண்டாமா? இந்த நிலையில் இவர்கள் 100 ரூபாய் விலை என்று அறிவித்தால் அதை எப்படி ஏற்க முடியும்? புதுமைப்பித்தன் கதைகள் முழு தொகுப்பை 100 ரூபாய்க்குக் கொடுத்தால், ஏற்கனவே பல பதிப்பகங்கள் குறிப்பாக காலச்சுவடு பதிப்பகம் சிறப்பான வடிவமைப்புடன், கெட்டி அட்டையுடன் ஒரு விலை நிர்ணயம் செய்து அச்சடித்து வைத்திருக்கிறது. அதன் நிலைமை என்னாவது?
முன்வெளியீட்டுத் திட்டம் என்று அறிவித்தால் அதில், பதிப்பகங்களுக்குக் கிடைக்கின்ற லாபத்தில்தான் வாசகர்களுக்கு பகிர்ந்தளிக்க முடியும். அப்படிப் பார்த்தாலும் இவர்கள் வைக்கின்ற விலைக்கும் அதற்கும் தொடர்பில்லாத நிலைதான் உள்ளது. தனது செல்வாக்கைப் பயன்படுத்தி திரள்நிதி வசூலித்துவிட்டுப் பதிப்பிக்கின்ற நூலுக்கு விலையும் வைப்பது அவர்களுக்கு நிதியுதவி செய்தவர்களை மாத்திரமல்ல, வாசகர்களையும் ஏமாற்றுகின்ற செயலாகும். மேலும், பல பதிப்பகங்கள் செய்கின்ற அரிய முயற்சிகளுக்கு மிகப்பெரிய தடையாக இதுபோன்ற செயல்கள் இருக்கும்.
குறுகிய காலத்தில் குறுக்கு வழியில் பெரும்பணம் ஈட்டவேண்டும் என்ற எண்ணத்தில் குறைந்தபட்ச தொழில் அறம் இல்லாது செயல்படுகின்ற இவர்கள், பதிப்பகத் துறைக்கு துரோகமிழைத்து வருகிறார்கள். இதை ஏற்கமுடியாது. புத்தகங்களுக்கு நியாயமான குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்யவேண்டியது பதிப்பகத்தின் கடமை. அதை கண்ணியத்துடன் இவர்கள் கடைப்பிடிக்க வேண்டும். இவற்றையெல்லாம் கணக்கிலும் கருத்திலும் கொண்டு பபாசி நிறுவனம் இந்த விசயத்தில் உடனடியாகத் தலையிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.” என்று கடந்த நவ.24ஆம் தேதி தன்னுடைய முகநூல் பக்கத்தில் எழுதியிருந்தார் தேனி விசாகன்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, சீர் வாசகர் வட்டத்தைச் சேர்ந்த கவிஞர் தம்பி, இவ்வாறு பதிலளித்துள்ளார்:
”முதலில் ஒரு செய்தி. சீர் வாசகர் வட்டத்திற்கு உரிமையாளர் என்று ஒருவர் கிடையாது. இது ஒரு நிறுவனமும் அல்ல.
நன்செய் பதிப்பகம் 2018இல் தந்தை பெரியாரின் 'பெண் ஏன் அடிமையானாள்?' நூலை 10 ரூபாய்க்கு யாரிடமும் நன்கொடை பெறாமல் ஒரு லட்சம் படிகளை அச்சிட்டது. அந்த ஒரு லட்சம் படிகள் பல தோழர்களின் முயற்சியால் 93 நாட்களில் மக்களுக்குப் போய்ச் சேர்ந்தது. யாருக்கும் தனி நூலாக தராமல் குறைந்ததே 100 படிகள் என்றுதான் கொடுத்தோம். பலர் வாங்கி பரிசளித்தார்கள். பிறகு பல தோழர்களின் முயற்சியால் செப்டம்பர் 2021இல் ஒரே நாளில் 1,25,000 படிகள் கொண்டு சேர்த்தோம். இன்றுவரை 5,00,000 படிகளைக் கடந்துள்ளோம்.
அப்போது பதிப்புத்துறை சென்னை பெருவெள்ள பாதிப்பு, பணமதிப்பிழப்பு, GST ஆகியவற்றால் கடுமையான நெருக்கடிக்கு ஆளாகி இருந்தது. பதிப்பாளர்கள் 1200, 600 என்று நூல்களை அச்சிட்ட காலம் போய் POD இல் (Print on demand) 50, 100 என்று அச்சிடும் நிலை வந்தது. விதிவிலக்காக எதிர், NCBH, பாரதி புத்தகாலயம் போன்ற சில பதிப்பகங்களே அச்சகத்தில் வழக்கம்போல அச்சிட்டன. அவற்றுக்கும் காரணம் அவர்களுக்கான நிர்வாகக் கட்டமைப்பும் தங்கள் நூல்களின் மீது கொண்ட நம்பிக்கையுமே.
இந்தச் சூழலில் அந்த நூலைப் பரப்பும் பணியில் உருவான தோழமைகள் இணைந்து இலக்கியத்தில் அரசியல் உணர்வோடு செயல்பட உருவாக்கப்பட்ட அமைப்புதான் சீர் வாசகர் வட்டம். இதில் தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் அதிகார அடுக்குமுறைகள் எதுவும் கிடையாது. தோழர்கள் தன்னார்வத்தோடு வேலை செய்வார்கள். அவ்வளவுதான். இது ஒரு பெரிய நட்பு வட்டம். இன்னும் நேரில் பார்த்துக் கொள்ளாத பல தோழர்கள் இருக்கிறார்கள். வழக்கமான வாசகர் வட்டம் போல் மாதத்துக்கு ஒரு புத்தகத்துக்கு கூட்டம் நடத்துவது போன்ற சம்பிரதாயங்களை ஒழிக்க நினைத்தோம்.
ஒரு வாசகர் வட்டத்தின் எல்லைகளை விரிவுபடுத்த விரும்பினோம். பதிப்புச்சூழலின் அவநம்பிக்கைகளை உடைத்தெறிய நினைத்தோம். சூழலின் காரணமாக பதிப்புத்துறையில் விலையேற்றம் தவிர்க்க முடியாததாக இருந்தது. எனக்கிருக்கும் பதிப்புத்துறை அனுபவங்களையும் சில உத்திகளையும் கைக்கொண்டு இயல்பிலேயே இத்துறைமேல் நான் கொண்ட பெருங்கனவையும் சாத்தியமாக்க தோழர்களின் உதவியோடு களமிறங்கினோம்.
எங்களின் முதல் நோக்கம் ஒரு எளிய வாசகருக்கும் தமிழின் உயர்ந்த இலக்கியங்கள் நல்ல தரத்தில் கைக்குக் கிடைக்க வேண்டும். அதன் முதல் வெளிப்பாடுதான் புதுமைப்பித்தன் கதைகள். அது பதிப்புலகில் ஏற்படுத்திய தாக்கங்களை நீங்கள் அறிவீர்கள். அந்த நூலுக்கு நண்பர்கள் ஆளுக்குக் கொஞ்சம் பணம் போட்டோம். பதிப்பாசிரியர் பேரா வீ. அரசு அவர்களும் தோள் கொடுத்தார். சீர் வாசகர் வட்டத்தின் சம்பளம் இல்லாத முழு நேர ஊழியனாக நான் இருந்தேன். மற்றவர்கள் தேவைப்படும் நேரத்தில் முடிந்த வேலைகளைச் செய்வார்கள்.
புதுமைப்பித்தன் கதைகள் நூலின் அடக்க விலையை விட குறைவான விலைக்கு 100 ரூபாய்க்குக் கொடுத்தோம். இழப்புக்கான தொகையை நாங்கள் எல்லோரும் பகிர்ந்துகொண்டோம். 3 நாட்களில் 5000 படிகள் தீர்ந்தது. ஒரே வருடத்தில் 27,000 படிகள் 150 ரூபாய் விலையில் விற்பனை ஆனது. நூல்களை ஆயிரக்கணக்கில் அடிக்கும்போது பெரிய அளவில் தொகை குறைகிறது. வாசகருக்கும் உடனே போய்ச் சேர்கிறது. இது ஒரு புதிய மாடல். எல்லோருக்கும் சாத்தியமா என்று கேட்டால் உழைப்பைக் கொடுக்க தயாராக இருக்கிற எல்லோருக்கும் சாத்தியம்.
இப்போது முயற்கூடு, கலக்கல் ட்ரீம்ஸ், பரிதி பதிப்பகம், Dravidian stock, யாவரும், கலப்பை பதிப்பகம், மின்னங்காடி, cotton candy போன்ற பதிப்பகங்கள் இந்த வழியில் நல்ல பலனைக் கண்டுள்ளனர். வாசகர்களும் கொண்டாடுகிறார்கள். இவர்களில் சிலருக்கு சீர் வாசகர் வட்டத்தின் வழிகாட்டுதலும் இருக்கிறது.
கடந்த நான்கு ஆண்டுகளில் சீர் ஒரு பெரிய வாசகர் திரளை ஒருங்கிணைத்துள்ளது. இது எல்லா பதிப்பாளர்களுக்குமானது.
கடந்த ஆண்டு யாவரும் திரை You tube சேனலுக்காக பதிப்பாளர் - எழுத்தாளர் ஜீவகரிகாலன் என்னை ஒரு நேர்காணல் செய்திருந்தார். தோழர் தேனி விசாகனின் அத்தனை குற்றச்சாட்டுகளுக்கும் அதில் விரிவாக பதில் சொல்லி இருக்கிறேன். இணைப்பை கமெண்ட்டில் தருகிறேன். அவசியம் பாருங்கள்.
அவரும் கட்டாயம் பார்க்க வேண்டும். பலவற்றைப் புரிந்து கொள்வார்.” என்று முகநூலில் பதிவிட்டிருந்தார்.
இருவரின் நிலைப்பாட்டிலும் உள்ள நியாய அநியாயங்கள் குறித்து முகநூலில் பலர் எழுதினர்.
இது தொடர்பாக எழுத்தாளர் சரவண கார்த்திகேயன், மலிவு விலை நூல்களை எப்படியெல்லாம் விற்பனை செய்யலாம் என்று கூறியிருந்த 3 ஐடியாக்கள் இதோ:
1. ஒரு நூல் மிக அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் என உறுதியாகத் தெரிந்தால் சலுகை விலை வைப்பது. நிறைய விற்றால் நூலின் விலை குறைவு எனினும் கையைக் கடிக்காது. அதுவும் முன்பதிவு அறிவித்தால் வாசகர்களிடமிருந்தே காசை வாங்கி நூலை அச்சிடலாம். கடன் / வட்டி என்ற தொந்தரவும் குறையும். என் புரிதலில் சீர் உள்ளிட்ட பலரும் மலிவு விலை வைப்பது இப்படித்தான்.
2. பதிப்பாளருக்கான மார்ஜின் மற்றும் எழுத்தாளருக்கான ராயல்டியில் சமரசம் செய்து கொண்டு விலையைக் குறைப்பது. ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு நூலை 1000 ரூபாய்க்கு மேல் விலை வைக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டேன். இந்தி தேசிய மொழியா? நூலை மலிவு விலைக்கு விற்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறேன். இரண்டையுமே அந்தந்தப் பதிப்பகத்தார் செயல்படுத்தினார்கள்.
3. சில நூல்களுக்கு யாராவது புரவலர் நிதி அளித்தால் குறைந்த விலையில் விற்க முடியும். அரசு நிறுவனங்களின் நூல்கள் மிகக் குறைந்த விலையில் இருப்பது இப்படித்தான்.
இன்னும் சில வழிகளும் இருக்கலாம்.
மலிவு விலை நூல் வெளியிடும் பதிப்பகங்கள் தம் வழிமுறை என்ன என்பதை கூடுமான வரை வெளிப்படையாகச் சொன்னால் மற்ற பதிப்பகங்களும் அதைப் பின்பற்றலாம். அல்லது அது தமக்குச் சரிப்படாது என்று கண்டுகொள்ளாது விடுவார்கள். இத்தகு குற்றச்சாட்டுகள் எழா.” என்று பதிவிட்டிருந்தார்.
இதே விவகாரத்தில் எழுத்தாளர் அராத்து தனக்கே உரிய ஸ்டைலில் “ஒரு நண்பர் அழைத்திருந்தார். அவருடைய செல்ல மகள், வயது 12 இருக்கலாம், குட்டிக்கதை, கவிதைகள் போல் சிலது எழுதியிருக்கிறாளாம். அதைப் புத்தகமாகப் போட வேண்டும். எங்கே போடலாம்? எனக் கேட்டார்.
முதலில் 100 காப்பி போட்டு தெரிந்தவர்களுக்கு இலவசமாகக் கொடுக்கப்போவதாக ஆரம்பித்தவர், அப்டியே ஒரு 50 காப்பிய பப்ளிக்ல விற்பனைக்கும் வைக்கலாம்னு யோசனை...அதுக்கும் ஐடியா குடுங்க என்றார்.
பெரும்பாலான எழுத்தாளர்களின் புத்தகங்களுக்கும் கிட்டத்தட்ட இதே நிலைமைதான். பெரும்பாலானப் புத்தகங்கள் பிரிண்ட் ஆன் டிமாண்ட் மூலம் 52 காப்பிகள் தான் போடப்படுகின்றன. தில் கொஞ்சம் அதிகம் இருந்தால் 100 வரை செல்கிறார்கள்.
அதில் ரைட்டர் காப்பி 10 இலவசம். ரைட்டரே 20 முதல் 50 காப்பி ரைட்டர் டிஸ்கவுண்டில் வாங்கி வைத்துக்கொண்டு சுற்றுவார். தெரிந்தவர்கள் அறிந்தவர்களுக்கு கையெழுத்துப் போட்டுக் கொடுத்து படம் எடுத்துக்கொள்வார். மீதமிருக்கும் 40 - 60 பிரதிகள் இரண்டு வருடங்களில் ஒன்று இரண்டு என மசமசவென ஓடும். இந்த அபத்தமான சூழலில் தான் சேலம் புத்தகக் கண்காட்சியில் தன் புத்தகம் இல்லை என எழவைக் கூட்டுவார்.
ஆஃப்செட்டில் போட்டால் 1000 பிரதிகள் போட்டால்தான் நல்ல விலைக்கு போட முடியும். 500, 300 எனப் போடலாம். ஆனால் விலை எகிறி விடும். நல்ல நிறுவனங்களின் பிரிண்ட் ஆன் டிமாண்ட் ஆஃப்செட் குவாலிடிக்கு அருகில் வந்தாலும், ஆஃப்செட் ஆஃப்செட்தான்.
இதைப்போன்ற கொடூரமான நிலைமையில்தான் ஒரு பக்கத்துக்கு 1 ரூவா வைக்கலாம், 1 ரூவா 40 பிசா வரைக்கும் வைக்கலாம் என்ற சீரியஸ் டிஸ்கஷன் ஓடிக்கொண்டிருக்கும். இதில் ஒழுங்கான டிராக்கிங் இருக்கும் குரியர் சர்வீஸ் மூலம் அனுப்பினால், 75 ரூபாய் ஆகும்.
200 பக்க புத்தகத்தை 250 ரூ விலை வைத்து, அதில் 30 % டிஸ்கவுண்ட் கொடுத்து, 175 வைத்து, கொரியர் செலவு இலவசம் என 75 ரூ போனால் 100 ரூ கிடைக்கும். அடக்க விலையே சமயங்களில் இந்த 100 ஐ தாண்டும்.
ஒவ்வொரு புத்தகமும் குறைந்தது 1000 பிரதிகள் ஓடினால்தான் நல்ல தரமான குவாலிட்டியில் சகாயமான விலையில் புத்தகங்கள் கிடைக்கும்.
50, 100 பிரதிகள் தான் ஓடும் என்னும் சூழலில் எதை விவாதித்தாலும் அபத்தம் தான்.
50 அல்லது 60 பிரதிகள் மட்டுமே விற்பனை ஆகும் அனைத்துப் புத்தகங்களையும் கிடைப்பதற்கரிய, தொன்மையான , புதைகுழியில் கண்டெடுத்தக் கலைப் பொருட்களாகத்தான் வாசகர்கள் பார்க்க வேண்டும். ரேர் ஸ்டாம்ப் கலக்ஷன், ஒரு அணா காசு, போன்றவற்றை எல்லாம் அதிக விலை கொடுத்து வாங்குவார்கள் அல்லவா? அதைப்போல, மியூசியம் பொருட்கள் போலத்தான் அணுக வேண்டும்.
என்னுடைய நாவல்களை மினிமம் 1000 பிரதிகள் ஆஃப்செட்டில் போடுங்கள் செல்வா என்று ஆட்டோ நெரேடிவ் ஓனரிடம் சொல்லி இருக்கிறேன்.
ஓடலன்னா? என்றார்...
2000 ஓடும். ஓடலன்னா ஓட்டணும். 1000 பிரதி குடோன்ல இருந்தாதான், அதை ப்ரொமோஷன் செய்து விற்பதற்கு ஒரு டிரைவிங் ஃபோர்ஸ் வரும் என்றேன். 5000 பிரதிகள் கூட ஓடவில்லை எனில் எப்படி?
ஹைதராபாத்தில் நண்பர் வெங்கட் அவருடைய நண்பர்களுடன் இணைந்து பதிப்பகம் நடத்துகிறார். அவர் எந்த புத்தகம் போட்டாலும் 2000 பிரதிகள் என்கிறார். ஆன்லைனில் மட்டுமே விற்பனை. அனைத்தும் முன்ன பின்ன ஆனாலும் விற்று விடுகிறது என்கிறார்.
அவர் முதன்முதலில் பதிப்பகம் ஆரம்பித்து 2000 பிரதிகள் போட்டு ஒரு அறிவிப்பை வெளியிடுகிறார். அப்போது புத்தகக் கண்காட்சி நடந்துகொண்டிருக்கிறது. இந்தக் கண்காட்சி முடிவதற்குள் இந்தப் புத்தகங்கள் விற்கவில்லை எனில் மீதமிருக்கும் புத்தகங்கள் நடு ரோட்டில் போட்டுக் கொளுத்துவேன் என்கிறார்.
தெலுங்கர்கள் ரோஷக்காரர்கள் போல. அனைத்தும் விற்றுத் தீர்ந்து விட்டன.
இங்கே இதைப்போல எல்லாம் அறிவிப்பு விட்டால் புத்தகக் கண்காட்சிக்கு வரும் அனைத்துப் புத்தகங்களையும் நாங்களே போட்டுக் கொளுத்திக்குடுக்கறோம், உங்களுக்கு ஏன் வீண் சிரமம் என வாசகர்களே முன்வந்து வேலையைக் கனக் கச்சிதமாக முடித்துக் கொடுப்பார்கள்.
தீபாவளியை விட அதிகமாக சென்னையை புகை மண்டலம் சூழும்.” என்று கிண்டலாக பதிவிட்டுள்ளார்.
மலிவு விலைப் பதிப்பு தொடர்பாக எழுதப்படும் பதிவுகள் இந்த புத்தகக் காட்சிக்கு மலிவுப் புத்தகமாக வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை!