தமிழக பா.ஜ.க. தலைமை அலுவலகம், கமலாலயம் 
செய்திக் கட்டுரை

எடப்பாடியிடம் பா.ஜ.க. டிக்செய்து தந்த 40 தொகுதிகள்!

Staff Writer

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடியை பா.ஜ.க. மூத்த தலைவர், குழுவினர் சந்தித்துப் பேசியது தெரிந்ததே! ஒரு மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் என்ன பேசப்பட்டது என்பதுதான் மற்ற தரப்பினருக்கு விடை தேடவேண்டிய பெரிய சஸ்பென்சாக இருக்கிறது!

சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருக்காக ஒதுக்கப்பட்ட பசுமைவெளிச் சாலை எடப்பாடி பழனிசாமி இல்லத்தில், இந்தச் சந்திப்பு நடைபெற்றது. மிகவும் கமுக்கமான உள்வட்டத்தைச் சேர்ந்தவர்களே இந்தச் சந்திப்பில் இடம்பெற்றிருந்தனர்.

பழனிசாமியைப் பொறுத்தவரை ஏற்கெனவே முக்கால்வாசி தொகுதிகளுக்கு ஒரு முறை சுற்றி வந்துவிட்டார் என்று சொல்லக்கூடிய அளவுக்கு, அவரது பிரச்சாரப் பயணம் தொடர்ந்தபடியே இருக்கிறது. ஏரியாவைப் பொறுத்து சில சமயம் இந்தப் பயணம் மாற்றப்பட்டாலும், பெரும்பாலும் திட்டமிட்டபடி பழனிசாமியின் பிரச்சாரம் பக்காவாக நடந்துவருகிறது.

பீகார் தேர்தலும் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், பா.ஜ.க. தமிழகத் தேர்தலில் களம் இறங்கத் தொடங்கிவிட்டது. அதற்கான பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. மாநில பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரனின் பயணமும் அறிவிக்கப்பட்டுவிட்டது.

இந்த நிலையில், நயினாரின் பயணத்தன்று அவருடன் இணைந்துகொள்ள வேண்டும் என பா.ஜ.க. தரப்பில் அவருக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. முன்னதாக, மேட்டுப்பாளையத்தில் பழனிசாமி பிரச்சாரத்தைத் தொடங்கியபோது, அதில் நயினார் நாகேந்திரன் கலந்துகொண்டார். அதைப் போலவே இந்த அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது. என்றாலும், இரு கட்சிகளின் தலைவர்களும் இணைந்து கூட்டுப் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையையும் பா.ஜ.க. தரப்பில் முன்வைத்திருக்கிறார்கள். காரணம், அ.தி.மு.க.வுக்கு வரும் கூட்டம் பா.ஜ.க.வுக்கு வருமோ வராதோ என்பது பற்றி சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் கூட்டணியின் வலுவைப் பற்றி மக்கள் குறைபாடாக எடுத்துக்கொள்ளவும் வாய்ப்பு உண்டு என கூட்டணியில் யோசிக்கிறார்கள்.

இதன் விளைவாகத்தான், இரு கட்சிகளின் தலைவர்களும் கூட்டாகப் பிரச்சாரம் செய்தால், மக்கள் கூட்டம் அதிகமாக வரும். கூட்டணி கெத்தைக் காட்டலாம் என்பது பா.ஜ.க. தரப்பின் திட்டம். ஆனால், எடப்பாடி வழக்கம்போல இதற்கு எந்த மறுப்பும் சொல்லவில்லை. அவரின் பாணியில் சிரித்து வைத்தார் என்கிறார்கள், கூட்டணி வட்டாரத்தில்.

விரைவில், ஆளும் கட்சியான தி.மு.க.வும் அதன் மேற்கு மண்டல இளைஞர் அணி நிகழ்ச்சியோடு, கையோடு அதிகாரபூர்வ பிரச்சாரத்தையும் தொடங்கிவிடுவது என முடிவில் இருக்கிறார்கள்.

இந்தப் பரபரப்பில் மற்ற எல்லாரும் பிரச்சாரத்துக்குத் தயாராக வேண்டியதுதான் என்கிற நிலை வந்துவிட்டபடியால், தொகுதிகள் குறித்த பேச்சுவார்த்தையும் தொடங்கிவிட்டது. சரியாகச் சொல்லவேண்டும் என்றால், என்னென்ன தொகுதிகள் என்பதைப் பிரச்சாரத்துக்கு முன்னரே தீர்மானித்துவிட பா.ஜ.க. விரும்புகிறது. அவ்வளவு விரைவில் அதைத் தீர்மானித்துவிட முடியுமா என்ன...?

ஆம், இடையில் த.வெ.க.வும் இதே கூட்டணியில் இடம்பெறுவது உறுதியென அடித்துச்சொல்லும் இக்கூட்டணி வட்டாரம், விஜய்க்கு 60 தொகுதிகள்+ துணைமுதல்வர் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டதாகச் சொல்கிறது. பா.ஜ.க. தரப்பில் தாங்கள் போட்டியிட விரும்பும் 40 தொகுதிகளைக் குறித்துக் கொடுத்திருக்கிறார்களாம்! அவற்றில் அ.தி.மு.க. உறுதியாகப் போட்டியிடத் தீர்மானித்துள்ள தொகுதிகள் நிச்சயம் இல்லை என்கிறார்கள், அந்தக் கட்சிப் புள்ளிகள்.

இன்னும் எண்ணிக்கையே உறுதியாகவில்லை என்று உறுதியாகச் சொல்பவர்களும் அதே கட்சியில் இருக்கிறார்கள். அதற்கும் மறுப்பு சொல்லும் இன்னொரு தரப்போ, 40க்குள் எந்தெந்தத் தொகுதிகள் என்பதுதான் லேட்டஸ்ட் பேச்சு என்பதை அடித்துச் சொல்கிறார்கள்!

கத்தரிக்காய் முற்றினால் கடைக்கு வந்துதானே ஆகும்! பார்ப்போம்!!