செய்திக் கட்டுரை

நீச்சல்குளத்தில் பாய்ந்த கார்- தாயும் மகளும் நீரில் மூழ்கினர்

Staff Writer

காரை நிறுத்துவதற்காகச் சென்றபோது தவறி ஓட்டியதால் அருகில் உள்ள நீச்சல் குளத்திற்குள் பாய்ந்தது, கார். இதில், காரை ஓட்டிச் சென்ற தாயும் அவரின் 5 வயது மகளும் நீருக்குள் மூழ்கினர்.

பிரான்சு நாட்டின் தெற்குப் பகுதி நகரமான மாசெய்லுவில் உள்ள லசியோட்டாவில்தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த 12ஆம் தேதி அங்குள்ள சமூக ஓய்வு மையத்திற்கு 38 வயதான தாய் தன் மகளுடன் ஜாகுவார் எக்ஸ் எஃப் காரில் சென்றார். அப்போது காரை அதற்குரிய நிறுத்தத்தில் நிறுத்துவதற்கான முயற்சியில் அவர் ஈடுபட்டிருந்தார். ஆனால், அவர் பிரேக்கை மிதிப்பதற்குப் பதிலாக ஆக்சிலேட்டரை அழுத்தியதால், அதிகத் திறன் வாய்ந்த அந்த கார் சீறிப் பாய்ந்தது.

வாகன நிறுத்துமிடத்துக்குப் பின்னால் இருக்கும் சரிவில் அதிவேகமாகப் பாய்ந்து ஓட்டிய கார், தடுப்பும் கண்ணாடிச் சட்டமும் இருந்தபோதும் அவற்றை நெட்டித் தள்ளிவிட்டுச் சென்றது. நீச்சல் குளத்திற்குள் விழுவதற்கு முன்னால் நூறடி தொலைவுக்காவது அது ஓடியிருக்கும்.

அதைத் தாண்டி குளத்திற்குள் கார் விழுந்து மூழ்கியபோது தாயும் மகளும் அதற்கு உள்ளேயே சிக்கிக் கொண்டனர். அந்த சமயம் அங்கு குளித்துக்கொண்டு இருந்த 20 பேர் அதிர்ச்சி அடைந்து தலைதெறிக்க ஓடினர்.

இரண்டு உயிர்காக்கும் வீரர்களும் நீச்சலடிக்க வந்த பொது மக்களில் ஒருவரும் அவர்கள் இருவரையும் நீருக்குள்ளிருந்த காருக்குள்ளே இருந்து மீட்டு வெளியே கொண்டுவந்தனர்.

உள்ளூர் நேரப்படி இரவு 8.50 மணிவாக்கில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. நல் வாய்ப்பாக அங்கு உயிர்காக்கும் வீரர்கள் இருந்ததால், தாய், மகளின் உயிர்களைக் காக்கமுடிந்தது. வழக்கமாக, இரவு 8.30 மணிக்கு இரண்டாவது சுற்று நீச்சல் அடிக்க வருபவர்களுக்காக குளத்தைத் திறந்துவைத்தனர்.

நீச்சல் பயிற்சிக்கு வந்தவர்களில் ஒருவருக்கு மட்டும்தான் கண்ணாடி உடைந்ததால் காயம் ஏற்பட்டது.

தாயும் மகளும் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

தற்போது அவர்கள் இருவரும் நலமுடன் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நல்ல வேளை, ஒருவரின் காயத்தோடு கதை முடிந்தது. இன்னும் எக்குத்தப்பாக ஏதாவது நடந்திருந்தால், குளிக்க வந்த 20 பேரில் எத்தனை பேருக்கு என்ன ஆகியிருக்குமோ?