செய்திக் கட்டுரை

இதயத்துக்கு(ள்) இவ்வளவு சிக்கல்களா... 5 ஆண்டுகளில் 50% அதிகரிப்பு...!

Staff Writer

கொரோனாவுக்குப் பிந்தைய உலக மாற்றங்களில் ஒன்றாக, இதயநோய்கள் அதிகரித்துவருகின்றன. இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 50 சதவீதம் அளவுக்கு இதயப்பிரச்னை பெருகியுள்ளது.

ஆங்காங்கே சிறு வயதிலேயே இளைஞர்களும் திடமான பெரியவர்களும் சட்டென உயிரிழக்கும் சம்பவங்கள் மட்டுமல்ல, இதயநோய்களுக்கான மருந்து விற்பனையும் இதை உறுதிப்படுத்துகிறது.

கொழுப்பைக் குறைக்கும் மருந்துகள், இதயச் செயலிழப்புத் தடுப்புமருந்துகள், பொதுவான இதய மருந்துகள் ஆகியவை அண்மைய சில ஆண்டுகளாக மிக அதிகமாக விற்பனை ஆகின்றன. அதாவது, வயிற்று செரிமானக் கோளாறுகள், சர்க்கரை நோய் போன்ற பொதுவான பிரச்னைகளுக்கான மருந்துகளைவிட இவை கூடுதலாக விற்கப்படுகின்றன என்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

அண்மையில் வெளியிடப்பட்ட மருந்துத் துறை புள்ளிவிவரத்தின்படி, இந்தியாவில் மருந்துச்சந்தையில் கிட்டத்தட்ட சரிபாதி அளவுக்கு 17 மருந்து நிறுவனங்கள் பிடித்துள்ளன. இதில் இதய மருந்துகள் மட்டும் 2021 ஜூனில் 1,761 கோடி ரூபாய்க்கு விற்பனை ஆகியுள்ளன. இதுவே, கடந்த ஜூன் மாதத்தில் 2,645 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஆண்டுக்கு ஆண்டு 10.7 சதவீதம் எனும் அளவில் திடமாக இந்த வளர்ச்சி காணப்படுகிறது.

பொதுவாக, மக்களிடம் இதயநோய்கள் பற்றிய விழிப்புணர்வு பெருகியிருப்பதும் இரத்தக்கொதிப்புக்கான அளவுகோள் உயர்ந்திருப்பதும் முதியோர்கள் அதிகரித்துவருவதும் முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன. நாட்டில் ஏற்படும் மரணங்களில் 63 சதவீதம் தொற்றா நோய்கள் எனப்படும் வகையைச் சேர்ந்தவை என மைய அரசின் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. இதில், இதயக் குழாய் நோய்களால் (சிவிடி) ஏற்படும் மரணங்கள் மட்டும் 27 சதவீதம் என்பது தீவிரமாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய ஒன்று.

சில ஆண்டுகளுக்கு முன்னர்வரை இரத்த அழுத்தத்தின் அளவு 130-140 இருந்தால் இரத்தக் கொதிப்பு என அளவிடப்பட்டது. ஆனால் இப்போது 120-க்கு மேல் என்றாலே இரத்தக்கொதிப்பு பாதிப்பு என மருத்துவ வழிகாட்டி அளவு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

ஆண்டுக்கு ஏழு இலட்சம் பேர் இதய நோய்களால் இறந்துபோகிறார்கள் என்கிறது சுகாதாரத் துறையின் கடைசியான சர்வே விவரம். கடந்த ஆண்டுவரை எடுக்கப்பட்ட பகுப்பாய்வு முடிவின்படி இந்திய இளைஞர்களில் 11 சதவீதம் பேர் இதயக்குழாய் நோய் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். பெண்களுக்குச் சற்றே கூடுதல் பாதிப்பு காணப்படுகிறது.

முன்னைவிட இப்போது இதயநோய் பாதிப்பு அதிகரித்துள்ளது என்றாலும், சிகிச்சை வசதியும் அதைப்போலவே வளர்ந்திருக்கிறது. இதில் நவீன முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

பொதுவான இதய நோய்கள்:

இதயத்தமனி நோய்(சிஏடி) - இரத்தக் குழாய்களில் கொலஸ்ட்ரால் படிந்து இதயத்துக்கு இரத்தத்தைச் சீராக ஓடவிடாமல் தடுப்பது.

இதயச் செயலிழப்பு - இதயம் பலவீனம் அடையும்நிலையிலோ இரத்தத்தை உந்தித் தள்ளுவது இயலாதநிலையிலோ இந்தச் சிக்கல் உண்டாகிறது.

நெஞ்சுவலி - இதயத் தசைகளுக்குப் போதுமான ஆக்சிஜன் கிடைக்காமல் ஒருமாதிரியாக உணரவைக்கும் மார்பு வலி. இதை ஆஞ்சைனா என்கிறார்கள். மாரடைப்புக்கு முந்தைய அறிகுறியாகவும் இது இருக்கலாம்.

இதயத் தசைத்திசு இறப்பு - மையோகார்டியல் இன்ஃபார்க்சன் எனப்படும் நிலையில், இதயத் தசைப் பகுதித் திசுக்கள் அழிந்துவிடும். இதயத்துக்குச் செல்லும் இரத்தம் திடீரென தடைபடும்போது ஆக்சிஜன் முதலிய திசு உணவு செல்லாமல் அது அழியும்.

மாரடைப்பு - இதயக் குழாய் நோய்களில் ஒன்று இது. இதயத்தின் செயல்பாடு திடீரென நின்றுவிடும். அண்மைக்காலமாக, பல பிரபலங்கள், இளம் வயதினர் இதனால் உயிரிழந்துவருவது குறிப்பிடத்தக்கது. சீரற்ற இதயத்துடிப்பு, இதயத் தமனி நோய் முதலிவற்றால் இது ஏற்படக்கூடும்.